முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு: திருச்சியில் 603 பேர் எழுதினார்கள்


முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு: திருச்சியில் 603 பேர் எழுதினார்கள்
x

முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை திருச்சியில் 603 பேர் எழுதினார்கள்.

திருச்சி

இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் உள்ள மருத்துவ பட்ட மேற்படிப்புகளான எம்.டி. எம்.எஸ். மற்றும் டிப்ளமோ படிப்புகளுக்கு 42,500-க்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. தமிழகத்தில் மட்டும் சுமார் 4 ஆயிரம் இடங்கள் உள்ளன. இந்த இடங்கள் நீட் தேர்வில் தகுதி பெறுபவர்களை கொண்டு நிரப்பப்படுகின்றன. இந்த தேர்வை தேசிய தேர்வுகள் முகமை நடத்துகிறது. அதன்படி 2023-24-ம் கல்வி ஆண்டு முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் நேற்று தொடங்கியது. 271 நகரங்களில் 600-க்கும் மேற்பட்ட மையங்களில் இந்த தேர்வு நடைபெறுகிறது. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, நெல்லை, திருச்சி, சேலம் உள்ளிட்ட நகரங்களில் நடந்தது. திருச்சி மாவட்டத்தில் பூலாங்குளத்துப்பட்டியில் உள்ள என்ஜினீயரிங்க கல்லூரி, துடையூரில் உள்ள மகாலட்சுமி என்ஜினீயரிங் கல்லூரி ஆகியவற்றில் தேர்வு மையம் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த தேர்வை நேற்று 603 பேர் கலந்து கொண்டு எழுதினார்கள். காலை 9 மணி முதல் பகல் 12.30 மணி வரை இணைய வழியில் இந்த தேர்வு நடைபெற்றது. தேர்வு எழுத வந்தவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. அதை கடைப்பிடித்து அனைவரும் தேர்வு எழுதினார்கள். தேர்வு முடிவுகள் வருகிற 31-ந் தேதி வெளியிடப்படுகிறது.


Next Story