திருவாரூர் மாவட்டத்தில் 610 ஏக்கர் குறுவை நெல் பயிர்கள் பாதிப்பு - வேளாண்துறை அறிக்கை தாக்கல்
திருவாரூர் மாவட்டத்தில் 610 ஏக்கர் குறுவை நெல் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக வேளாண்துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
சென்னை,
ஒவ்வொரு ஆண்டும் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவதுபோல் இந்த ஆண்டும் ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீரை நம்பி காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள விவசாயிகள் குறுவை நெல் விதைத்தனர். சுமார் 5 லட்சம் ஏக்கர் அளவுக்கு குறுவை நெல் பயிரிடப்பட்டிருந்த நிலையில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக சாகுபடிக்கு தேவையான நீர் கடைமடை வரை சென்றடையவில்லை.
இதனால் டெல்டா மாவட்டம் முழுவதும் பயிரிடப்பட்டிருந்த குறுவை பயிர்கள் தண்ணீரின்றி காய்ந்துவிட்டது. இதையடுத்து குறுவை நெல் பாதிப்புக்கு நிவாரணம் அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.13,500 இழப்பீடாக வழங்கப்படும் என்று தமிழக அரசு நேற்று அறிவித்தது.
இந்த நிலையில், திருவாரூர் மாவட்டம் முழுவதும் தண்ணீர் இன்றி 610 ஏக்கர் குறுவை நெற்பயிர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டிருப்பதாக தமிழக அரசிடம் வேளாண் துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரணம் போதாது என்றும் விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.