குரூப்-2 தேர்வை 6,267 பேர் எழுதினர்
சேலம் மாவட்டத்தில் 21 மையங்களில் நடந்த குரூப்-2 தேர்வை 6,267 பேர் எழுதினர். ஒரு சில மையங்களில் வினாத்தாள் குளறுபடியால் தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
குரூப்-2 தேர்வு
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப்-2, குரூப்-2 ஏ பதவிகளில் வரும் இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், உதவி ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளர், தனிப்பிரிவு உதவியாளர்கள் உள்பட 5 ஆயிரத்து 446 பணியிடங்களை நிரப்புவதற்கான முதல்நிலைத்தேர்வு கடந்த ஆண்டு மே மாதம் 21-ந் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் முதன்மை தேர்வை எதிர்கொள்ள வேண்டும். அதன்படி, குரூப்-2, குரூப்-2ஏ முதன்மை தேர்வுகள் தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்றது.
சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில் 6,705 பேர் இந்த தேர்வை எழுதுவதற்கு தகுதி பெற்றவர்கள் என்று அறிவிக்கப்பட்டு இருந்தனர். இதற்காக சேலம், சேலம் மேற்கு, சேலம் தெற்கு, வாழப்பாடி ஆகிய தாலுகாவிற்கு உட்பட்ட 21 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. காலை 9 மணிக்கு முன்பாகவே தேர்வர்கள் தங்களது தேர்வு மையங்களுக்கு வர தொடங்கினர். பின்னர் அவர்களின் நுழைவு சீட்டு சரிபார்க்கப்பட்டு தேர்வு கூடங்களுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். தேர்வு மையங்கள் முன்பாக அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டு இருந்த தேர்வு எண், தேர்வு கூடம் ஆகிய விவரங்களை சரிபார்த்து சென்றனர்.
வினாத்தாள் குளறுபடி
அதன்பிறகு காலை 9.30 மணிக்கு தேர்வுகள் தொடங்கியது. ஆனால் ஒருசில மையங்களில் வினாத்தாள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. அதாவது, சீரகாபாடியில் உள்ள தனியார் கல்லூரி மையத்தில் தேர்வு தொடங்கிய அரை மணி நேரமாக வினாத்தாள் வழங்கப்படவில்லை. இதனால் தேர்வு எழுத வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலுக்கு முயன்றனர். பின்னர் அவர்களை அதிகாரிகள் தடுத்து சமாதானப்படுத்தினர்.
ஒரு சில நிமிடத்தில் வினாத்தாள் குளறுபடி சரி செய்யப்பட்டு தேர்வுகள் தொடங்கியது. இதேபோல், அயோத்தியாப்பட்டணத்தில் தனியார் கல்லூரி மையத்தில் குறிப்பிட்ட நேரத்தை கடந்து வினாத்தாள் வழங்கப்பட்டதால் தேர்வு எழுத கூடுதல் நேரம் வழங்கப்பட்டது.
கலெக்டர் ஆய்வு
வினாத்தாள் எண் மற்றும் தேர்வர்களின் பதிவு எண் இரண்டுக்கும் முரண்பாடுகள் இருந்ததால் வினாத்தாள் கொடுக்க தாமதம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சேலம் மாவட்டத்தில் தேர்வு எழுத தகுதியான 6,705 பேர்களில் 6,267 பேர் மட்டும் தேர்வு எழுதினர். 341 பேர் தேர்வு எழுத வரவில்லை. காலையில் நடந்த தேர்வில் இருந்து 97 பேருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
சேலம் அரசு கலைக்கல்லூரியில் நடந்த குரூப்-2 தேர்வை மாவட்ட கலெக்டர் கார்மேகம் நேரில் பார்வையிட்ட ஆய்வு செய்தார். மதியம் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடந்த மற்றொரு தேர்வில் 6,368 பேர் கலந்து கொண்டு எழுதினர். 337 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வில் முறைகேடுகள் நடைபெறுவதை தடுக்கும் வகையில் 10 பறக்கும் படைகளும், 35 கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டிருந்தது. இந்த குழுவினர் 21 தேர்வு மையங்களுக்கும் சென்று தீவிரமாக கண்காணித்தனர்.