ரூ.10 கோடியில் 6435 புதிய எல்.இ.டி. மின்விளக்குகள்


ரூ.10 கோடியில் 6435 புதிய எல்.இ.டி. மின்விளக்குகள்
x

திருவண்ணாமலையில் ரூ.10 கோடியில் 6435 புதிய எல்.இ.டி. மின்விளக்குகள் அமைக்கும் பணியை நகரமன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன் தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை நகரின் தெருக்கள் மற்றும் சாலைகளில் குறைந்த மின் பயன்பாட்டுடன் கூடுதல் வெளிச்சம் தரும் எல்.இ.டி. விளக்குகளை அமைக்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

அதன்படி திருவண்ணாமலையில் 6435 புதிய எல்.இ.டி. மின்விளக்குகள் பொருத்தும் பணியை நகரமன்ற தலைவர் நிர்மலாவேல்மாறன் இன்று தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் கூறுகையில், பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆலோசனையின்படி பல்வேறு வளர்ச்சி பணிகளை செய்து வருகிறோம்.

அதன் தொடர்ச்சியாக நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தற்போது பயன்பாட்டில் உள்ள 5.634 பழைய சோடியம் மற்றும் டியூப்லைட்டுகளை முற்றிலுமாக மாற்றி ரூ.9¼ கோடி மதிப்பில் எல்.இ.டி. மின்விளக்குகள் பொருத்தப்படுகிறது. மேலும் நகரின் விரிவாக்க பகுதிகள் மற்றும் பக்தர்கள் அதிகம் குவியும் 801 முக்கிய இடங்களில் புதிய மின்கம்பங்கள் அமைத்து, எல்.இ.டி. மின்விளக்குகள் பொருத்தப்படுகிறது.

அதற்காக ரூ.87 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் அனைத்தும், தீபத் திருவிழாவிற்கு முன்பாக முடிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

சாலைகளின் அகலங்களை கணக்கிட்டு அதற்கேற்றபடி 40 முதல் 200 வாட்ஸ் வரையிலான எல்.இ.டி. விளக்குகள் பொருத்தப்படும். இதன் மூலம் திருவண்ணாமலை நகரம் இரவிலும் பகல் போல் பிரகாசிப்பதோடு மின் கட்டண செலவுகள் குறையும் என்றார்.

நிகழ்ச்சியின்போது நகராட்சி ஆணையாளர் தட்சிணாமூர்த்தி, நகர செயலாளர் ப.கார்த்திவேல்மாறன், நகராட்சி பொறியாளர் நீலேஷ்வர், உதவி பொறியாளர் ரவி மற்றும் கவுன்சிலர்கள் உடன் இருந்தனர்.


Next Story