கார்களில் கடத்தப்பட்ட 648 மதுபாட்டில்கள் பறிமுதல்


கார்களில் கடத்தப்பட்ட 648 மதுபாட்டில்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 20 Sept 2023 12:15 AM IST (Updated: 20 Sept 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

கோட்டக்குப்பத்தில் கார்களில் கடத்தப்பட்ட648 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

விழுப்புரம்

கோட்டக்குப்பம்.

புதுச்சேரி மாநிலத்தில் இருந்து விழுப்புரம் மாவட்டம் வழியாக காரில் மதுபாட்டில்கள் கடத்தப்படுவதாக விழுப்புரம் மண்டல மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்னக்காமணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் இணாயத்பாஷா, விஸ்வநாதன் மற்றும் போலீசார் நேற்று அதிகாலை 2 மணியளவில் கோட்டக்குப்பம் மதுவிலக்கு சோதனைச்சாவடி அருகில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக புதுச்சேரி மார்க்கத்தில் இருந்து ஒன்றன் பின் ஒன்றாக வந்த 2 கார்களை போலீசார் சந்தேகத்தின்பேரில் வழிமறித்து சோதனை செய்தபோது அதில் ஒரு காரில் 27 அட்டைப்பெட்டிகளில் 648 உயர் ரக மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

2 பேர் கைது

உடனே 2 கார்களில் வந்த இருவரை போலீசார் மடக்கிப்பிடித்து விசாரித்ததில் அவர்கள் இருவரும் புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பு பகுதியை சேர்ந்த செல்வராஜ் (வயது 47), சார்லஸ் (38) என்பதும், இவர்கள் இருவரும் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து சென்னைக்கு மதுபாட்டில்களை கடத்த முயன்றதும் தெரியவந்தது.

இதையடுத்து செல்வராஜ், சார்லஸ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த ரூ.1½ லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள 2 கார்களையும் பறிமுதல் செய்தனர்.


Next Story