முதல்- அமைச்சரின் திறனாய்வு தேர்வை 6,482 மாணவ- மாணவிகள் எழுதினர்


முதல்- அமைச்சரின் திறனாய்வு தேர்வை 6,482 மாணவ- மாணவிகள் எழுதினர்
x

சேலம் மாவட்டத்தில் நேற்று 25 மையங்களில் முதல்-அமைச்சர் திறனாய்வு தேர்வு நடந்தது. இதில், 6,482 மாணவ, மாணவிகள் பங்கேற்று தேர்வு எழுதினர்.

சேலம்

சேலம் மாவட்டத்தில் நேற்று 25 மையங்களில் முதல்-அமைச்சர் திறனாய்வு தேர்வு நடந்தது. இதில், 6,482 மாணவ, மாணவிகள் பங்கேற்று தேர்வு எழுதினர்.

திறனாய்வு தேர்வு

தமிழகத்தில் உயர் கல்வி படிப்பதை ஊக்கப்படுத்தும் வகையில் பள்ளி கல்வித்துறை சார்பில் முதல்-அமைச்சர் திறனாய்வு தேர்வு நடப்பாண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதன்மூலம் பிளஸ்-2 முதல் பட்டப்படிப்பு வரை ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் கல்வி உதவித்தொகையாக வழங்கப்பட உள்ளது. அரசு பள்ளிகளில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பிளஸ்-1 படிக்கும் 500 மாணவர்கள், 500 மாணவிகள் என மொத்தம் 1,000 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு உதவித்தொகையாக ஒரு கல்வியாண்டுக்கு மாதம் ரூ.1,000 வீதம் 10 மாதங்களுக்கு ரூ.10 ஆயிரம் என இளங்கலை பட்டப்படிப்பு வரை வழங்கப்படும்.

இதற்கான தேர்வு கல்வித்துறை சார்பில் மாவட்டம் முழுவதும் நடந்தது. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில் சேலம் கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, குகை மாநகராட்சி பள்ளி, அம்மாப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்பட 25 மையங்களில் திறனாய்வு நடத்தப்பட்டது. காலையில் முதல் தாளான கணிதமும், மதியம் 2 மணிக்கு 2-ம் தாளான அறிவியல், சமூக அறிவியல் தேர்வும் நடந்தது.

649 பேர் ஆப்சென்ட்

இந்த தேர்வை எழுத 7,131 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களுக்காக மாவட்டம் முழுவதும் 25 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. ஆனால் 6,482 மாணவ, மாணவிகள் மட்டும் தேர்வு எழுதினர். 649 பேர் தேர்வு எழுதாமல் ஆப்சென்ட் ஆகினர். இந்த தேர்வு பணியில் 25 முதன்மை கண்காணிப்பாளர்கள், 25 துறை அலுவலர்கள் மற்றும் 9 வழித்தட அலுவலர்கள், 360 அறை கண்காணிப்பாளர்கள் என கல்வித்துறை அலுவலர்கள் ஈடுபட்டனர். தேர்வு மையங்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


Next Story