வீட்டின் பூட்டை உடைத்து 65 பவுன் நகை-ரூ.2 லட்சம் கொள்ளை


வீட்டின் பூட்டை உடைத்து 65 பவுன் நகை-ரூ.2 லட்சம் கொள்ளை
x

வீட்டின் பூட்டை உடைத்து 65 பவுன் நகை-ரூ.2 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

திருச்சி

மணப்பாறை:

எலக்ட்ரிக்கல் கடை உரிமையாளர்

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கருமலை அருகே உள்ள எஸ்.மேட்டுபட்டியை சேர்ந்தவர் சண்முக சுந்தரராஜா பெருமாள்(வயது 55). இவர் புத்தானத்தம் பகுதியில் எலக்ட்ரிக்கல் கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று இவருக்கு திருமண நாள் என்பதால் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் கர்நாடக மாநிலம் மைசூருக்கு சென்று விட்டார்.

இந்த நிலையில் அவரது வீட்டில் வேலை செய்யும் பெண், நேற்று காலை அந்த வீட்டிற்கு சென்றபோது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. மேலும் அறையின் கதவு மற்றும் அறைக்குள் இருந்த பீரோ ஆகியவை உடைக்கப்பட்டு இருந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக வீட்டின் உரிமையாளருக்கு தகவல் கொடுத்தார்.

நகை-பணம் கொள்ளை

மேலும் இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த மணப்பாறை போலீஸ் துணை சூப்பிரண்டு ராமநாதன் மற்றும் புத்தானத்தம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில், வீட்டில் இருந்த சுமார் 65 பவுன் நகைகள் மற்றும் ரூ.2 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருக்கலாம், என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற தடயவியல் நிபுணர்கள், தடயங்களை சேகரித்தனர். அங்கு மோப்ப நாய் லில்லி வரவழைக்கப்பட்டது. வீட்டில் இருந்து மோப்பம் பிடித்தபடி ஓடிய நாய், அருகில் உள்ள தோப்பில் சென்று நின்றது. அது யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.

இட்லி பொடி

இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள், போலீசில் மாட்டிக்கொள்ளக்கூடாது என்பதற்காக வீட்டின் பின் பகுதியில் இட்லி பொடியை தூவிவிட்டு தப்பிச்சென்றது போலீசாருக்கு தெரியவந்தது. இது குறித்த புகாரின்பேரில் புத்தானத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story