ரூ.652 கோடியில் 3-ம் கட்ட பாதாள சாக்கடை திட்டம்-சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழு தலைவர் தகவல்
நெல்லை மாநகராட்சி பகுதியில் ரூ.652 கோடியில் 3-ம் கட்ட பாதாளச்சக்கடை திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்று சட்டமன்ற பேரவை மதிப்பீடு குழு தலைவர் அன்பழகன் தெரிவித்தார்.
நெல்லை மாநகராட்சி பகுதியில் ரூ.652 கோடியில் 3-ம் கட்ட பாதாளச்சக்கடை திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்று சட்டமன்ற பேரவை மதிப்பீடு குழு தலைவர் அன்பழகன் தெரிவித்தார்.
சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழு
தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டுக்குழு தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. (கும்பகோணம்) தலைமையிலான குழுவில் எம்.எல்.ஏ.க்கள் சந்திரன் (திருத்தணி), சிவகுமார் (மயிலம்), பரந்தாமன் (சென்னை எழும்பூர்), ராஜேஷ்குமார் (கிள்ளியூர்), ஜவாஹிருல்லா (பாபநாசம்), சட்டசபைச்செயலாளர் சீனிவாசன், துணைச்செயலாளர் பாலகிருஷ்ணன், பிரிவு அலுவலர் பாண்டியன் ஆகியோர் நெல்லை மாவட்டத்திற்கு ஆய்வு வந்தனர்.
நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன், அப்துல்வகாப் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் சரவணன், ஆணையாளர் சிவ கிருஷ்ணமூர்த்தி, துணை மேயர் ராஜூ ஆகியோர் இந்த குழுவினருடன் சென்று பல்வேறு திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
சித்த மருத்துவ கல்லூரி
மேலப்பாளையம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தின் அடிப்படை வசதிகள் மற்றும் போதுமான மருத்துவ வசதிகள் குறித்தும், வண்ணார்பேட்டை தெற்கு புறவழிச்சாலையில் நான்கு வழிசாலை விரிவாக்க பணிக்காக பாளையங்கால்வாய் விரிவாக்கம் செய்யப்பட்டு வருவதையும் பார்வையிட்டனர். குலவணிகர்புரத்தில் "தோழி" பணிபுரியும் மகளிர் தங்கும் விடுதியினையும், அவ்விடுதியில் பயோமெட்ரிக் முறையில் கதவு திறக்கப்படுவது குறித்தும் பார்வையிட்டு, போதுமான இடவசதி உள்ளதா? என்பதையும் பணிபுரியும் மகளிரிடம் கேட்டறிந்தனர்.
தொடர்ந்து வணிகவரி இணை ஆணையர் அலுவலகத்தினை பார்வையிட்டு, இணைய வழியாக ஒவ்வொரு சோதனை சாவடிகளில் சரக்கு போக்குவரத்து சரியான முறையில் செல்லும் நடைமுறைகள் குறித்து பார்வையிட்டனர்.
பின்னர் அரசு சித்த மருத்துவ கல்லூரி மாணவிகள் ஆதிதிராவிடர் விடுதியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பத்திரப்பதிவு அலுவலகத்திலும், நெல்லை அரசு மல்டி ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியிலும் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மற்றும் அவரது சகோதரியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். அதனைத் தொடர்ந்து ரெட்டியார்பட்டி அரசு பள்ளியை ஆய்வு செய்தனர்.
பாதாள சாக்கடை திட்டம்
பின்னர் சட்டமன்ற மதிப்பீட்டு குழு தலைவர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
பாளையங்கால்வாயில் அமலை செடிகள் அதிகளவில் அடர்ந்திருந்தது. அதனை உடனடியாக பொதுப்பணித்துறை அதிகாரிகளை சரிசெய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. பல லட்சம் ரூபாய் செலவு செய்து ஆதிதிராவிடர் நல விடுதியில் சமையலுக்கு கொடுக்கப்பட்ட சமையல் எந்திரங்களை பயன்படுத்தாமல் உள்ளனர். நாங்குநேரியில் நடந்த சம்பவம் போல் இனியும் வராமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
நெல்லை மாவட்டத்தில் திட்டப்பணிகள் அனைத்தும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நெல்லை மாநகரப் பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் 4 கட்டங்களில் நடைபெற்று வரும் நிலையில் அதில் தற்போது 2 கட்டப்பணி முடிந்துள்ளது. ரூ.652 கோடி மதிப்பில் 3-ம் கட்ட பணிக்கு ஒப்பந்த புள்ளி கோரப்பட்டு பணிகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் இன்னும் ஓராண்டு காலத்திற்குள் முடிவடையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வேதனை அளிக்கிறது
ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கூறுகையில், "தமிழகத்தின் பாரம்பரிய மருத்துவமான சித்த மருத்துவத்தை மேம்படுத்தும் வகையில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்க தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அது கவர்னருக்கு அனுப்பப்பட்டுள்ளது. கவர்னர் ஆர்.என்.ரவி 6 மாத காலமாக அந்த கோப்பை கிடப்பில் போட்டுள்ளார். இது வேதனை அளிக்கிறது" என்றார்.