664 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
தேனியில், 664 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து வாலிபரை கைது செய்தனர். 2 பேரை தேடி வருகின்றனர்.
புகையிலை பொருட்கள் கடத்தல்
தேனியில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் ஒரு காரில் கடத்திச் செல்லப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் தேனி என்.ஆர்.டி. சாலையில் போலீசார் நேற்று காலை ரோந்து சென்றனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனையிட முயன்றனர். போலீசாரை பார்த்ததும் காரில் வந்த 2 பேர் தப்பி ஓட முயன்றனர். அவர்களில் ஒருவரை போலீசார் மடக்கிப் பிடித்தனர். மற்றொருவர் தப்பி ஓடிவிட்டார்.
பின்னர் அந்த காருக்குள் போலீசார் சோதனையிட்டபோது, 11 மூட்டை மற்றும் 2 சாக்குப் பைகளில் புகையிலை பொருட்கள் இருந்தன. அவற்றை போலீசார் கைப்பற்றி தேனி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். கடத்தலுக்கு பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டது.
வீட்டில் பதுக்கல்
விசாரணையில் பிடிபட்டவர், தேனி பாரஸ்ட் ரோடு 8-வது தெருவை சேர்ந்த பாலாஜி (வயது 25) என்பதும், தப்பி ஓடியவர் அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பதும் தெரியவந்தது.
மேலும் விசாரணையில், தேனி விஸ்வநாததாஸ் நகரில் ஒரு வீட்டில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து, அங்கிருந்து வேறு பகுதிக்கு காரில் எடுத்துச் சென்றதாகவும், இதற்கு பாரஸ்ட் ரோடு 7-வது தெருவை சேர்ந்த நவரத்தினவேல் என்பவரும் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து விஸ்வநாததாஸ் நகரில் உள்ள வீட்டில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது அங்கும் மூட்டை, மூட்டையாக புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. அந்த வீட்டில் இருந்து 22 மூட்டைகள் மற்றும் 15 சாக்குப் பைகளில் இருந்த புகையிலை பொருட்களை போலீசார் கைப்பற்றினர்.
664 கிலோ
கடத்தல் மற்றும் பதுக்கல் தொடர்பாக மொத்தம் 664 கிலோ புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.3½ லட்சம் ஆகும்.
மேலும் இந்த சம்பவம் குறித்து பாலாஜி, விக்னேஷ், நவரத்தினவேல் ஆகிய 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதில் பாலாஜியை கைது செய்தனர். மற்ற 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.