ஜல்லிக்கட்டில் 699 காளைகள் சீறிப்பாய்ந்தன; மாடுகள் முட்டி போலீஸ்காரர் உள்பட 73 பேர் காயம்


புதுக்கோட்டை அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 699 காளைகள் சீறிப்பாய்ந்தன. இதில் மாடுகள் முட்டி போலீஸ்காரர் உள்பட 73 பேர் காயம் அடைந்தனர்.

புதுக்கோட்டை

ஜல்லிக்கட்டு

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் சுந்தம்பட்டி ஊராட்சி ராஜாபட்டி மாசிமலை கருப்பு, பட்டவன் கோவில் திருவிழாவையொட்டி நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. விழாவுக்கு புதுக்கோட்டை மாவட்ட வருவாய் அதிகாரி செல்வி தலைமை தாங்கினார். சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கொடியசைத்து ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார்.

அதனைத்தொடர்ந்து மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதில் புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல், தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 699 காளைகளும், 200 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். இதையடுத்து, மாடுபிடி வீரர்களுக்கும், காளைகளுக்கும் உரிய மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் களத்தில் இறக்கப்பட்டனர்.

73 பேர் காயம்

சீறிப்பாய்ந்த ஜல்லிக்கட்டு காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டிப்போட்டு அடக்கினர். சில காளைகள் மாடுபிடி வீரர்களிடம் சிக்காமல் தாவிச்சென்றது. இதையடுத்து, வெற்றிபெற்ற மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்கம், வெள்ளி நாணயங்கள், சில்வர் பாத்திரங்கள், மின்விசிறி, பீரோ, கட்டில் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

காளைகள் முட்டியதில், மாடுபிடி வீரர்கள் 41 பேரும், மாட்டின் உரிமையாளர்கள் 23 பேரும், பார்வையாளர்கள் 8 பேரும், போலீஸ்காரர் ஒருவர் என மொத்தம் 73 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு வாடிவாசல் அருகே அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் 4 பேர் கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனைக்கும், ஒருவர் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும், ஒருவர் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இதேபோல் ஜல்லிக்கட்டு காளை ஒன்று காயமடைந்ததால் அந்த காளையை ஜல்லிக்கட்டில் விடாமல் சிகிச்சை அளித்து அனுப்பி வைத்தனர்.

ஜல்லிக்கட்டு போட்டியை கந்தர்வகோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கண்டு களித்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை ராஜாபட்டி கிராம மக்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை கந்தர்வகோட்டை போலீசார் செய்திருந்தனர்.

ஜல்லிக்கட்டில் தடியடி நடத்திய போலீசார்

ஜல்லிக்கட்டில் காளைகள் பங்கேற்பதற்காக ஒவ்வொரு குழுவாக பிரித்து பதிவு மூப்பு அடிப்படையில் தடுப்பு வேலிகளுக்குள் காளைகளை போலீசார் அனுமதித்தனர். அப்போது சிலர் இந்த முறையை பின்பற்றாமல் தடுப்பு வேலியை பக்கவாட்டில் சரித்து தங்களது காளைகளை உள்ளே போக செய்தனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் ஜல்லிக்கட்டு காளைகள் வரிசையாக அனுப்பப்பட்டன.


Next Story