பெங்களூருவில் பதுங்கி இருந்த கோவை ரவுடிகள் 7 பேர் சிக்கினர்
பெங்களூருவில் பதுங்கிய கோவை ரவுடிகள் 7 பேரை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.
கோவை
பெங்களூருவில் பதுங்கிய கோவை ரவுடிகள் 7 பேரை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.
ரவுடி கும்பல்கள் மோதல்
கோவை விளாங்குறிச்சியை சேர்ந்த சத்தியபாண்டி என்பவர் கடந்த பிப்ரவரி மாதம் 12-ந் தேதி 5 பேர் கும்பலால் துப்பாக்கியால் சுடப்பட்டும், அரிவாளால் வெட்டப்பட்டும் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நடந்த மறுநாள் கோவில்பாளையத்தை சேர்ந்த கோகுல் என்பவர் கோவை கோர்ட்டில் கையெழுத்து போட்டு விட்டு வெளியே வந்த போது, பட்டப்பகலில் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
கடந்த 2021-ம் ஆண்டு ரத்தினபுரியை சேர்ந்த குரங்கு ஸ்ரீராம் என்பவர் கொல்லப்பட்டார். இந்த படுகொலை சம்பவங்கள் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் இரு தரப்பு ரவுடி கும்பலுக்குள் நடந்த மோதலில் கொலை சம்பவம் அரங்கேறியது தெரியவந்தது.
கண்காணிப்பு
இதைத்தொடர்ந்து கோவை மாநகரில் ரவுடிகளை ஒழிக்கவும், குற்ற சம்பவங்களை தடுக்கவும் மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் துணை கமிஷனர் சந்தீஷ் மேற்பார்வையில் பல் வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ரவுடிகளின் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அவர் களை கண்காணிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.
இதற்காக போலீஸ் உதவி கமிஷனர் கணேஷ், இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் ஆகியோர் தலைமையில் ரவுடி ஒழிப்பு தனிப்படை அமைக்கப்பட்டது.
பெங்களூருவில் பதுங்கல்
அவர்கள், சமூகவலைத்தளங்களில் பயங்கர ஆயுதங்களுடன் வீடியோக்களை வெளியிட்டு கஞ்சா சப்ளை செய்த இரு கும்பலை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட ரவுடிகளை கைது செய்தனர். போலீ சாரின் தேடுதல் வேட்டையை தொடர்ந்து ரவுடி கும்பல் வெளி மாநிலங்களுக்கு சென்று பதுங்கி உள்ளனர்.
இந்தநிலையில் ரவுடி கும்பலை சேர்ந்த சிலர் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பதுங்கி இருப்பதாக நேற்று முன்தினம் தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
உடனே கோவையில் இருந்து தனிப்படை போலீசார் பெங்களூருக்கு சென்று தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது பெங்களூருவில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ரவுடிகள் 7 பேர் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
துரத்தி சென்று பிடித்தனர்
இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று அந்த அடுக்கு மாடி குடியிருப்பில் ஒவ்வொரு அறையாக சோதனை செய்தனர். அதில் ஒரு அறையில் இருந்த 4 பேர் போலீசார் வருவதை பார்த்ததும் தப்பி ஓடினர். அவர்களில் 2 பேரை 2 கிலோ மீட்டர் தூரம் தூரத்தி சென்று போலீசார் மடக்கி பிடித்தனர்.
விசாரணையில், அவர்கள் கோவை ரத்தினபுரியை சேர்ந்த சுஜி மோகன் (வயது 25), புள்ளி பிரவீன் (23) என்பது தெரியவந்தது. இது போல் மற்ற 2 பேரையும் 4 கிலோ மீட்டர் தூரம் துரத்திச்சென்று தனிப்படை போலீசார் மடக்கிப்பிடித்தனர். விசாரணையில், கணபதியை சேர்ந்த அமர்நாத் (23), பிரசாந்த் (25) என்பது தெரியவந்தது.
7 பேர் கைது
மேலும் அங்குள்ள அறையில் பதுங்கி இருந்த ரவுடிகளின் கூட்டாளிகளான கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த அஷ்வின் என்ற அஷ்வின் குமார் (29), கணபதியை சேர்ந்த ராஜேஷ் (25), வடவள்ளி யை சேர்ந்த பிரதீப் (22) ஆகியோரையும் போலீசார் பிடித்தனர். பின்னர் அவர்கள் 7 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 50 கிராம் விலை உயர்ந்த மெத்தம்பெட்ட மைன் என்ற போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர். கைதான 7 பேரையும் போலீசார் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கோவை அழைத்து வர இருப்பதாக தெரிகிறது. பெங்களூருவில் பதுங்கி இருந்த கோவை ரவுடிகளை போலீசார் 4 கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்று பிடித்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.