ரூ.7½ கோடியில் கட்டப்பட்ட தடுப்பணைக்கு ஆபத்து


ரூ.7½ கோடியில் கட்டப்பட்ட தடுப்பணைக்கு ஆபத்து
x

திருமணஞ்சேரி அக்னி ஆற்றில் தொடரும் மணல் திருட்டால் ரூ.7½ கோடியில் கட்டப்பட்ட தடுப்பணைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர்.

புதுக்கோட்டை

அக்னி ஆறு

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே திருமணஞ்சேரி அக்னி ஆற்றில் தஞ்சாவூர் மாவட்டம் நெய்வேலியை ஒட்டி உள்ள பகுதியில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.7 கோடியே 41 லட்சம் மதிப்பீட்டில் தடுப்பணை கட்டப்பட்டது. மழைக்காலத்தில் காட்டாற்றில் தண்ணீர் செல்லும் போது இந்த தடுப்பணையில் தண்ணீரை தேக்கி அதன் மூலம் அப்பகுதியில் சுமார் 50 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. மேலும் இந்த தடுப்பணையில் இருந்து கால்வாய் அமைக்கப்பட்டு பாசன குளங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.

குடிநீருக்கு தட்டுப்பாடு

இந்த தடுப்பணையினால் கறம்பக்குடி பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக உயர்ந்தது. ஆழ்குழாய் கிணறுகளில் தடையின்றி தண்ணீர் கிடைத்ததால் விவசாயம் மற்றும் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்ட நிலை மாறியது. இதை தவிர திருமணஞ்சேரி சுகந்த பரிமளேஸ்வரர் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் இந்த தடுப்பணையில் உள்ள தண்ணீரை குளிப்பதற்கும், ஈம கிரிகை உள்ளிட்ட சடங்குகள் செய்வதற்கும் பயன்படுத்தி வந்தனர்.

மணல் திருட்டு

இந்நிலையில் திருமணஞ்சேரி அக்னி ஆற்றில் மணல் கடத்தல் தொடர்ந்து நடக்கிறது. குறிப்பாக இந்த தடுப்பணைக்கு அருகே மணலை பொக்லைன் எந்திரம் மூலம் வெட்டி மணல் திட்டுகளாக குவித்து வைத்து பின்னர் அதை லாரி, சரக்கு வேன்களில் கடத்தி செல்கின்றனர்.

இதனால் இந்த தடுப்பணை மிகவும் வலுவிழந்து வருகிறது. பக்கவாட்டு சுவர்கள் பெயர்ந்து உள்ளன. தொடர்ந்து மணல் திருடப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு இப்பகுதியில் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்படும் என விவசாயிகள் வேதனை தெரிவித்து உள்ளனர்.

நீர்வளத்தை காக்க வேண்டும்

இதுகுறித்து கறம்பக்குடி பகுதி விவசாயிகள் கூறுகையில், திருமணஞ்சேரி அக்னி ஆற்று படுகையில் இரவு பகலாக மணல் திருட்டு நடக்கிறது. இதனால் இப்பகுதி சாலைகள் அனைத்தும் குண்டும், குழியுமாக கிடக்கின்றன. இந்த தடுப்பணை கட்டப்பட்ட பின்னர்தான் வறட்சி காலத்திலும் ஆழ்குழாய் கிணறுகள் கை கொடுத்தன.

எனவே கறம்பக்குடியின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் அக்னி ஆற்று தடுப்பணை பகுதியில் மணல் திருட்டை கட்டுப்படுத்த வேண்டும். மேலும் திருமணஞ்சேரி பாலம் அருகே நீரோட்டத்தை பாதிக்கும் வகையில் மண்டி கிடக்கும் கோரை புற்கள் மற்றும் முட்புதர்களை அழித்து நீர்வளத்தை காக்க வேண்டும் என தெரிவித்தனர்.


Next Story