நாகை தலைமை தபால் நிலையத்தை 7 மாவட்ட மீனவர்கள் முற்றுகையிட்டு போராட்டம்


நாகை தலைமை தபால் நிலையத்தை 7 மாவட்ட மீனவர்கள் முற்றுகையிட்டு போராட்டம்
x

இந்திய கடற்படை துப்பாக்கி சூடு நடத்தியதை கண்டித்து நாகை தபால் நிலையத்தை 7 மாவட்ட மீனவர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்

இந்திய கடற்படை துப்பாக்கி சூடு நடத்தியதை கண்டித்து நாகை தபால் நிலையத்தை 7 மாவட்ட மீனவர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

துப்பாக்கி சூடு

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதியை சேர்ந்தவர் செல்வம்(வயது 37). இவருக்கு சொந்தமான விசைப்படகில் காரைக்கால், மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களை சேர்ந்த 10 மீனவர்கள் கடந்த மாதம் (அக்டோபர்) 15-ந் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

இவர்கள் 21-ந் தேதி நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டு இருந்தபோது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த மீனவர் வீரவேல் என்பவர் காயம் அடைந்தார்.

3 நாள் வேலை நிறுத்தம்

இதுதொடர்பாக வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் இந்திய கடற்படை மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்திய கடற்படை கமாண்டர் விஷால் குப்தா தலைமையிலான அதிகாரிகள் கடந்த மாதம் 27-ந் தேதி நாகை துறைமுகத்திற்கு வந்து துப்பாக்கி குண்டுகள் தாக்கிய விசைப்படகை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

வேலை நிறுத்த போராட்டம்

இந்த நிலையில் மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய இந்திய கடற்படையினரை கண்டித்து நாகை மீனவர்கள் 3 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர். அதன்படி கடந்த 9- ந்தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 11-ந் தேதி முற்றுகை போராட்டம் நடைபெறும் என மீனவர்கள் அறிவித்திருந்தனர்.

மீனவர்களின் வேலை நிறுத்தம் காரணமாக நாகை மாவட்டத்தில் 25 மீனவ கிராமங்களை சேர்ந்த 600 விசைப்படகுகள், 3 ஆயிரத்து 500 பைபர் படகுகள் கடற்கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

முற்றுகை போராட்டம்

இந்த நிலையில் அறிவித்தபடி நேற்று நாகை தலைமை தபால் நிலையம் முன்பு மீனவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுவதற்காக திரண்டு வந்தனர்.

அப்போது மழை பெய்தது. ஆனாலும் மழையையும் பொருட்படுத்தாமல் கொட்டும் மழையில் மீனவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோஷங்கள் எழுப்பினர்

தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய இந்திய கடற்படையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த மீனவருக்கு நிவாரணம் வழங்க வேண்டும். அவரது குடும்பத்திற்கு அரசு வேலை வழங்க வேண்டும். துப்பாக்கி் சூட்டில் சேதம் அடைந்த விசைப்படகுக்கு பதிலாக, புதிய விசைப்படகு வழங்க வேண்டும்.

அன்னிய செலாவணியை ஈட்டித்தரும் தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய இந்திய கடற்படையை கண்டித்தும் போராட்டத்தில் பங்கேற்ற மீனவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

7 மாவட்ட மீனவர்கள் பங்கேற்பு

இந்த போராட்டத்தில் நாகை, மயிலாடுதுறை, காரைக்கால், புதுச்சேரி, புதுக்கோட்டை, திருவாரூர், கன்னியாகுமரி உள்பட 7 மாவட்ட மீனவர்கள் கலந்து கொண்டனர். மீனவர்களின் போராட்டம் காரணமாக 100-க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story