இறந்த ஆட்டை தின்ற 7 நாய்கள் சாவு
இறந்த ஆட்டை தின்ற 7 நாய்கள் இறந்தன.
காரைக்குடி,
சாக்கோட்டை போலீஸ் சரகம் பிரம்புவயல் பகுதியில் ஒரு ஆடு நாய் கடித்ததால் இறந்தது. இதையடுத்து உரிமையாளர் ஆட்டை சரியாக புதைக்காமல் சென்றதாக தெரிகிறது. இதற்கிடையே புதைக்கப்பட்ட ஆட்டின் உடலை சில நாய்கள் கடித்து வெளியே இழுத்து தின்றன. சிறிது நேரத்தில் இறந்த ஆட்டின் உடலை தின்ற 7 நாய்கள் ஒன்றன்பின் ஒன்றாக திடீரென இறந்தன. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த அருண் என்பவர் சாக்கோட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதில் நாய் கடித்து ஆடு இறந்ததால் அதன் உரிமையாளர் ஆத்திரம் அடைந்து இறந்த ஆட்டின் மீது விஷம் தடவி வேண்டுமென்றே சரியாக புதைக்காமல் விட்டுவிட்டதாகவும், அதனால்தான் இறந்த ஆட்டை தின்ற 7 நாய்களும் இறந்ததாகவும் கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இறந்துபோன நாய்கள் மற்றும் ஆட்டின் உடல் பாகங்களை கால்நடை மருத்துவர்கள் பரிசோதனைக்காக எடுத்து சென்றனர்.