அரியலூரை சேர்ந்த 60 விவசாயிகளுக்கு ரூ.7¼ லட்சம் இழப்பீட்டு தொகை


அரியலூரை சேர்ந்த 60 விவசாயிகளுக்கு ரூ.7¼ லட்சம் இழப்பீட்டு தொகை
x

தமிழகத்திலேயே முதல்முறையாக 5 மத்தியஸ்தர்கள் கொண்ட அமர்வு மூலம் நுகர்வோர் சமரச மையத்தில் அரியலூரை சேர்ந்த 60 விவசாயிகளுக்கு ரூ.7¼ லட்சம் இழப்பீட்டு தொகை பெற்று தரப்பட்டது.

அரியலூர்

பயிர்காப்பீடு

மத்திய அரசின் வேளாண்மை காப்பீடு நிறுவனமும், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனமும் இணைந்து செயல்படுத்திய பயிர் காப்பீட்டு திட்டத்தில் கடந்த 2011-ம் ஆண்டு அரியலூர் மாவட்டம், செந்துறை தாலுகா குழுமூர் கிராம விவசாயிகள் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பயிர் காப்பீடு செய்து இருந்தனர்.

இந்தநிலையில் இயற்கை சூழ்நிலையால் விவசாயம் பாதிக்கப்பட்டது. ஆனால், சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனங்கள் இழப்பீட்டு தொகையை வழங்கவில்லை என்று கடந்த 2014-ம் ஆண்டு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் குழுமூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி சுப்பிரமணியன் உள்ளிட்ட 60 பேர் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

மாவட்ட நுகர்வோர் ஆணையத்தில் மனு

கடந்த 2017-ம் ஆண்டு இந்த வழக்கில் தீர்ப்பளித்த நுகர்வோர் ஆணையம் காப்பீட்டு நிறுவனங்கள் விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்திருந்தது. இருப்பினும் இழப்பீட்டு தொகை வழங்கப்படாததால் அதனை பெற விவசாயிகள் அரியலூர் மாவட்ட நுகர்வோர் ஆணையத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்தநிலையில் இந்த வழக்கில் மத்தியஸ்தர்களாக வக்கீல்கள் மோகன், கதிரவன், இளவரசன், ஜெயராமன் மற்றும் சமூக சேவகர் லதா ஆகியோர் அடங்கிய அமர்வை அமைத்து அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய நீதிபதி ராமராஜ் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

ரூ.7¼ லட்சம் இழப்பீட்டு

விவசாயிகளின் பிரதிநிதிகள், காப்பீட்டு நிறுவன அதிகாரிகள், இருதரப்பு வக்கீல்கள் ஆகியோரிடம் தனித்தனியாகவும், கூட்டாகவும் சமரச பேச்சுவார்த்தை 3 சுற்றுகளாக மத்தியஸ்தர்கள் நடத்தினர். இதன் இறுதியில் விவசாயிகளுக்கு ரூ.7¼ லட்சம் இழப்பீடு வழங்க காப்பீட்டு நிறுவனங்கள் ஒப்புக்கொண்டன.

இதையடுத்து, அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய நீதிபதி ராமராஜ் சமரச ஒப்பந்தத்தின் நகலை விவசாயிகளின் பிரதிநிதி சுப்பிரமணியனிடம் நேற்று வழங்கினார். இதன் பின்னர் காப்பீட்டு நிறுவனத்தின் பிரதிநிதிகள் விவசாயிகளுக்கு இழப்பீடு தொகையாக ரூ.6 லட்சமும், மன உளைச்சலுக்கு ரூ.1 லட்சத்து 20 ஆயிரம், வழக்கு கட்டணம் ரூ.5 ஆயிரம் என மொத்தம் ரூ.7¼ லட்சத்தை இணைய வழியில் வழங்கினர்.

தமிழகத்தில் முதல் முறையாக...

வழக்குகளை முடிக்க மத்தியஸ்தர்களை நியமித்து சமரச பேச்சுவார்த்தை நடத்தும் முறை நீதித்துறையில் கடந்த 10 ஆண்டுகளாக இருந்து வருகிறது. ஒவ்வொரு வழக்கிலும் ஒரு மத்தியஸ்தர் மட்டுமே நியமிக்கப்படுவார். இந்தநிலையில் இந்த வழக்கில் 5 மத்தியஸ்தர் கொண்ட அமர்வு தமிழகத்திலேயே முதல் முறையாக அரியலூர் மாவட்ட நுகர்வோர் ஆணையம் சார்பில் அமைக்கப்பட்டது. மேலும், இந்த வழக்கை தாக்கல் செய்த சுப்பிரமணியன் கடந்த 10 ஆண்டுகளாக சுமார் 150 முறை நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story