ஓய்வுபெற்ற மருத்துவக்கல்லூரி ஊழியரிடம் 7¼ பவுன் சங்கிலி பறிப்பு


ஓய்வுபெற்ற மருத்துவக்கல்லூரி ஊழியரிடம் 7¼ பவுன் சங்கிலி பறிப்பு
x

ஓய்வுபெற்ற மருத்துவக்கல்லூரி ஊழியரிடம் 7¼ பவுன் சங்கிலியை மர்ம நபர் பறித்து சென்றார்.

திருச்சி

தங்கச்சங்கிலி பறிப்பு

திருச்சி உறையூர் சீனிவாசநகர் 7-வது மெயின்ரோட்டை சேர்ந்தவர் ரத்தினம். இவருடைய மனைவி காமாட்சி (வயது 76). இவர் மருத்துவக்கல்லூரி பிசியோதெரபி துறையில் தட்டச்சராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். நேற்று பகல் ரத்தினமும், காமாட்சியும் வீட்டில் இருந்தனர். அப்போது அவர்களுடைய வீட்டில் ஏற்கனவே பெயிண்ட் வேலை செய்த வாலிபர் அங்கு வந்து ஏதாவது வேலை இருக்கிறதா? என்று கேட்டார். பின்னர் அவர் குடிக்க டீ தருமாறு கேட்டார்.

உடனே காமாட்சி மாடிக்கு சென்றுவிட்டார். சிறிதுநேரத்தில் அந்த வாலிபர் ரத்தினத்தை கீழே உள்ள வீட்டில் வைத்து வெளிப்புறமாக தாழ்ப்பாள் போட்டுவிட்டு மாடிக்கு சென்றார். அங்கு காமாட்சி கழுத்தில் அணிந்து இருந்த 7¼ பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்ப முயன்றார். உடனே காமாட்சி சங்கிலியை பிடித்தபோது, அவரை தள்ளிவிட்டு விட்டு, அந்த நபர் தப்பிச் சென்றுவிட்டார். இது குறித்து தகவல் அறிந்த உறையூர் போலீசார், வீடு புகுந்து கைவரிசை காட்டிய வாலிபர் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கத்தியை காட்டி மிரட்டி...

*திருச்சி கருமண்டபம் ஜெயநகரை சேர்ந்தவர் ஜெயசீலி (54). இவர் நேற்று முன்தினம் மாலை ஜெயநகர் 2-வது தெருவில் நடந்து சென்றார். அப்போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் ஜெயசீலி கழுத்தில் அணிந்து இருந்த 4 பவுன் சங்கிலியை பறித்தார். ஆனால் அவர் சங்கிலியை பிடித்துக்கொண்டு பறிக்க விடாமல் போராடியதில், பாதி சங்கிலி மட்டும் அந்த நபரின் கையில் சிக்கியது. உடனே அவர் தப்பி சென்றுவிட்டார். இது குறித்து கண்டோன்மெண்ட் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

*திருச்சி திருவானைக்காவலை சேர்ந்தவர் சரவணன் (29). இவர் நேற்று முன்தினம் அழகிரிபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நபர், சரவணனிடம் கத்தியை காட்டி மிரட்டி அவர் சட்டைப்பையில் வைத்திருந்த ரூ.1,000-ஐ பறித்தார். இது குறித்து சரவணன் அளித்த புகாரின்பேரில் ஸ்ரீரங்கம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், ஸ்ரீரங்கம் ராகவேந்திராபுரத்தை சேர்ந்த துப்பாக்கி அருண் என்ற அருண்குமார் (42) தான் பணம் பறித்தவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர்.

கத்திக்குத்து

திருச்சி செந்தண்ணீர்புரம் வ.உ.சி.தெருவை சேர்ந்தவர் அலெக்ஸ்அந்தோணிராஜ் (40). இவரது வீட்டின் எதிரே வசிக்கும் லட்சுமி முன்விரோதம் காரணமாக அலெக்ஸ் அந்தோணிராஜின் தாய் ஜோஸ்பின் மேரியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த அவரை அரசு மருத்துவமனைக்கு அலெக்ஸ் அந்தோணிராஜ் அழைத்து சென்றார். அப்போது அங்கு வந்த 4 பேர் பேனா கத்தியால் அலெக்ஸ் அந்தோணிராஜை குத்திவிட்டு தப்பி சென்றனர். இது குறித்து அரசு மருத்துவமனை போலீசார் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த பிரபு, குப்புசாமி உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

6 பேர் கைது

*மணப்பாறை பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுவதாக திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மேற்பார்வையிலான தனிப்படையினர் மணப்பாறை பகுதியில் பல்வேறு இடங்களில் நேற்று திடீர் ேசாதனையில் ஈடுபட்டனர். அப்போது அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்ற 6 பேரை பிடித்து மணப்பாறை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் ஆரோக்கியசாமி(50), பண்ணப்பட்டியை செர்ந்த கணேசன்(41), கோவில் தெருவை செர்ந்த வில்லியம் ஜெரால்டு(47), அண்ணாவி நகரை சேர்ந்த கார்த்திக்(29), காமராஜ் நகரைச் சேர்ந்த முருகன்(29), நல்லியம்பட்டியைச் செர்ந்த வீரமலை(47) என்பது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர். மேலும் 6 செல்போன்கள், 3 இருசக்கர வாகனம், ரூ.34 ஆயிரம் மற்றும் லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.


Next Story