சாட்சி சொல்ல வந்தவரை தாக்க திட்டம் தீட்டிய 7 பேர் கைது

கோவை கோர்ட்டு வளாகத்தில் சாட்சி சொல்ல வந்தவரை தாக்க திட்டம் தீட்டிய 7 பேரை ரேஸ்கோர்ஸ் போலீசார் கைது செய்தனர்.
கோவை கோர்ட்டு வளாகத்தில் சாட்சி சொல்ல வந்தவரை தாக்க திட்டம் தீட்டிய 7 பேரை ரேஸ்கோர்ஸ் போலீசார் கைது செய்தனர்.
இந்த பரபரப்பு சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
கோர்ட்டுக்கு சாட்சி சொல்ல வந்தார்
கோவை கணபதியில் உள்ள காமராஜபுரத்தை சேர்ந்தவர் சுகந்தராம் (வயது 22). இவரது நண்பரான பிரதீப் என்பவரை கடந்த ஆண்டு சில நபர்கள் அரிவாளால் வெட்டினர். இந்த வழக்கு விசாரணை கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக சாட்சி சொல்ல நேற்று முன்தினம் சுகந்தராம் கோவை கோர்ட்டிற்கு வந்தார். அப்போது அவருடன் அவரது நண்பர்களும் வந்திருந்தனர்.
இந்த நிலையில் கோவை கோர்ட்டில் ஒரே இடத்தில் அதிகப்படியான நபர்கள் குவிந்து உள்ளதாக ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
எதிரணியை தாக்க திட்டம்
இந்த தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் விக்னேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு கூடியிருந்த சுகுந்தராம் மற்றும் அவரது நண்பர்களிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது போலீசாரிடம் சுகந்தராம் மற்றும் அவரது நண்பர்கள் கோர்ட்டில் சாட்சி சொல்லிவிட்டு சினிமாவிற்கு செல்வதற்காக வந்ததாக தெரிவித்தனர். ஆனால் போலீஸ் விசாரணையில் அவர்கள், கோர்ட்டில் தங்களுக்கு எதிராக சாட்சி சொல்ல வரும் எதிரணியினரை தாக்குவதற்காக திட்டம் தீட்டி அங்கு திரண்டது தெரியவந்தது.
7 பேர் கைது
இதையடுத்து சுகந்தராம், அவருடன் இருந்த சஞ்சீவ் குமார் (20), சுதீர் (18), சுபாஷ் (24), சஞ்சய் (23), தமிழ்செல்வன் (23), 17 வயது சிறுவன் என மொத்தம் 7 பேரை போலீசார் ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். பின்னர் அவர்களை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக வேனில் ஏற்றினர்.
அப்போது அங்கு கூடியிருந்த அவர்களின் உறவினர்கள் போலீஸ் வேன் முன் திரண்டு போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். தொடர்ந்து கைதான 7 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






