கஞ்சா-லாட்டரி சீட்டு விற்ற 7 பேர் கைது
கஞ்சா-லாட்டரி சீட்டு விற்ற 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி தீரன் நகரில் உள்ள ஒரு கல்லூரி அருகே கஞ்சா விற்றதாக மயிலாடுதுறை வடக்கு ரெயில்வே காலனி பகுதியை சேர்ந்த வினோத்குமார்(வயது 29) என்பவரை எடமலைப்பட்டிபுதூர் போலீசார் கைது செய்தனர். கண்டோன்மெண்ட் பகுதியில் கஞ்சா விற்ற சோமரசம்பேட்டை பகுதியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன்(28) என்பவரை கண்டோன்மெண்ட் போலீசார் கைது செய்தனர். திருச்சி இ.பி.ரோடு பகுதியில் உள்ள தியேட்டர் அருகில் கஞ்சா விற்பனை செய்ததாக முத்துக்கருப்பன்(27) என்பவரை கோட்டை போலீசார் கைது செய்தனர். திருச்சி காந்தி மார்க்கெட் சூரஞ்சேரி பாலபத்திரகாளி கோவில் அருகே கஞ்சா விற்பனை செய்ததாக மணிகண்டன் என்பவரை காந்தி மார்க்கெட் போலீசார் கைது செய்தனர். பாலக்கரை காஜாபேட்டை அருகே கஞ்சா விற்பனை செய்ததாக காஜாேபட்டை அண்ணா நகரை சேர்ந்த பிலாலுதீன்(27) என்பவரை பாலக்கரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 2 கிலோ 950 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் திருச்சி பாலக்கரை பகுதியில் உள்ள பிரபாத் ரவுண்டானா என்ற இடத்தில் வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்ததாக தென்னூர் ஆழ்வார்தோப்பு பகுதியை சேர்ந்த பாபு(53) என்பவரை பாலக்கரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் திருச்சி திருவெறும்பூர் பகுதியை சேர்ந்த செந்தில்குமார்(35), எடமலைப்பட்டிபுதூரை அடுத்த செங்குறிச்சி வடக்குத்தெருவை சேர்ந்த மணி(48) என்பவரிடம் இருந்து லாட்டரி சீட்டு வாங்கியுள்ளார். அவர் வாங்கிய லாட்டரிக்கு பரிசு விழுந்த நிலையில் பரிசுக்கான தொகையை மணியிடம் கேட்டுள்ளார். மணி பரிசுத்தொகையை தர மறுத்ததால் செந்தில்குமார் பொன்மலை போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் பொன்மலை போலீசார் வழக்குப்பதிவு செய்து மணியை கைது செய்தனர்.