வெவ்வேறு சம்பவங்களில் எலக்ட்ரீசியன் உள்பட 7 பேர் சாவு


வெவ்வேறு சம்பவங்களில் எலக்ட்ரீசியன் உள்பட 7 பேர் சாவு
x

வெவ்வேறு சம்பவங்களில் எலக்ட்ரீசியன் உள்பட 7 பேர் இறந்தனர்.

திருச்சி

வெவ்வேறு சம்பவங்களில் எலக்ட்ரீசியன் உள்பட 7 பேர் இறந்தனர்.

எலக்ட்ரீசியன்

மணப்பாறை அண்ணாவிநகரை சேர்ந்தவர் செல்வம் (54). எலக்ட்ரீசியனான இவர் நேற்று முன்தினம் மதியம் மோட்டார் சைக்கிளில் விராலிமலையில் இருந்து திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தார். அளுந்தூர் பஸ்நிறுத்தத்தில் பாலாமணி என்ற மூதாட்டியை ஏற்றிக்கொண்டு நாகமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் பாலாமணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தில் படுகாயம் அடைந்து திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த செல்வம் நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். மணிகண்டம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆற்றில் மூழ்கினார்

லால்குடி அடுத்த ஜங்கம்மா ராஜபுரம் அண்ணா நகரை சேர்ந்தவர் சதாசிவம் (70). இவர் கொள்ளிடம் ஆற்றில் குளித்தபோது, தண்ணீரில் மூழ்கி இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் லால்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

2 முதியவர்கள் தற்கொலை

திருச்சி தில்லைநகர் பகுதியில் வசித்து வந்தவர் மோகன் (62). கட்டிட தொழிலாளியான இவர் குடும்பத்தை பிரிந்து வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் குறித்து உறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (70). உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த இவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்கள்.

வாலிபர் சாவு

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டிணம் பகுதியை சேர்ந்தவர் சுனில்ராஜ் (19). இவர் ஜே.கே.நகரில் உள்ள மளிகை கடையில் வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் சம்பவத்தன்று இரவு அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருச்சி திருவானைக்கோவில் பகுதியை சேர்ந்தவர் சிவசங்கர் (53). உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர் நேற்று முன்தினம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மாடியில் இருந்து தவறி விழுந்து

திண்டுக்கல் பெரியார் காலனி பகுதியை சேர்ந்தவர் திருக்குமார். இவருடைய மகன் பிரகாஷ் (17). திருச்சி எடமலைப்பட்டி புதூரில் உள்ள உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு பிரகாஷ் வந்திருந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு உறவினர் வீட்டு மாடியில் நின்று செல்போனில் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து இறந்துவிட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் எடமலைப்பட்டி புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story