புதுச்சேரி பாஜக பிரமுகர் கொலை வழக்கில் 7 பேர் நீதிமன்றத்தில் சரண்..!


புதுச்சேரி பாஜக பிரமுகர் கொலை வழக்கில் 7 பேர் நீதிமன்றத்தில் சரண்..!
x

புதுச்சேரி பாஜக பிரமுகர் கொலை வழக்கில் 7 பேர் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர்.

புதுச்சேரி,

புதுச்சேரி பாஜக பிரமுகர் செந்தில் குமார் நாட்டு வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் தேடப்பட்டு வந்த 7 பேர் திருச்சி நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். தனிப்படை போலீசார் தேடி வந்த நிலையில், திருச்சி ஜே.எம்.எண் 3 நீதிமன்றத்தில் நீதிபதி பாலாஜி முன்பு ரவுடி நித்தியானந்தம், சிவசங்கர், ராஜா, பிரதீப், கார்த்திக், விக்னேஷ், வெங்கடேசன் ஆகியோர் சரணடைந்துள்ளனர்.

வழக்கின் முழு விவரம்:-

புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் அருகே உள்ள கணுவாப்பேட்டையை சேர்ந்தவர் ரங்கசாமி. ஆசிரியர். அவரது மகன் செந்தில்குமார் (வயது 46). பா.ஜ.க. பிரமுகரான இவர், மங்கலம் தொகுதி பொறுப்பாளராக இருந்தார். புதுவை உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் தீவிர ஆதரவாளர் ஆவார்.

நேற்று இரவு மங்கலம் தொகுதி அரியூரில் நடந்த பா.ஜ.க. கூட்டத்தில் கலந்து கொண்டு வில்லியனூர் கண்ணகி அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள தனியார் பேக்கரி கடையில் டீ குடித்து கொண்டிருந்தார். அப்போது அங்கு 3 மோட்டார் சைக்கிளில் முகமூடி அணிந்தவாறு 9 பேர் கொண்ட கும்பல் வந்தது.

பின்னர் அவர்கள் திடீரென நாட்டு வெடிகுண்டை செந்தில்குமார் மீது வீசினர். அந்த குண்டு செந்தில்குமாரின் அருகில் விழுந்து வெடித்தது. இதனால் சுதாரித்து கொண்ட செந்தில்குமார் அங்கிருந்து தப்பியோட முயன்றார். ஆனால் அதற்குள் அந்த கும்பல் மற்றொரு நாட்டு வெடிகுண்டை தூக்கி வீசியது. அந்த வெடிகுண்டு அவரமேல் விழுந்து பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது.

வெடிகுண்டு வீச்சில் நிலைகுலைந்து கீழே சரிந்த அவரை அக்கும்பல் சுற்றி வளைத்து சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில் முகம் சிதைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் அவர் துடிதுடித்து இறந்தார். அவர் இறந்ததை உறுதி செய்த கும்பல் கொலைவெறியுடன் அங்கிருந்து மோட்டார் சைக்கிள்களில் மின்னல் வேகத்தில் தப்பி சென்றது.

கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடப்பட்டு வந்த நிலையில் 7 பேர் இன்று திருச்சி நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர். முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story