தூக்கணாம்பாக்கம் அருகேதம்பதியை தாக்கி வீட்டை சூறையாடிய 7 பேர் கைது
தூக்கணாம்பாக்கம் அருகே தம்பதியை தாக்கி வீட்டை சூறையாடிய 7 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.
தூக்கணாம்பாக்கம்,
முன்விரோத தகராறு
கடலூர் அடுத்த தூக்கணாம்பாக்கம் அருகே உள்ள தென்னம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சேதுபதி. இவருக்கும் களையூரை சேர்ந்த ஜீவா என்பவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக முன்விரோதம் உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஜீவா உளளிட்ட 7 பேர் கொண்ட கும்பல் திடீரென சேதுபதி வீட்டிற்குள் அத்துமீறி உள்ளே நுழைந்தது. அங்கு சேதுபதி இல்லாததால் ஆத்திரமடைந்த கும்பல், வீட்டில் இருந்த சேதுபதியின் அண்ணன் பூபாலன் மற்றும் அவரது மனைவி பவித்ரா ஆகியோரை சரமாரியாக தாக்கியதோடு, பவித்ராவை மானபங்கப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
பெட்ரோல் ஊற்றி மிரட்டல்
மேலும் அந்த கும்பல் பூபாலன் மீது பெட்ரோலை ஊற்றி கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்ததோடு, வீட்டின் ஜன்னல், கதவு மற்றும் மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட பொருட்களை அடித்து உடைத்து சூறையாடி சேதப்படுத்தி சென்றதாக தெரிகிறது. இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த பூபாலன், பவித்ரா ஆகியோர் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து பூபாலன் கொடுத்த புகாரின்பேரில் களையூரை சேர்ந்த ஜீவா(வயது 23), தூக்கணாம்பாக்கத்தை சேர்ந்த கணபதி (22), செல்லஞ்சேரியை சேர்ந்த ரகு (22), களையூரை சேர்ந்த சதீஷ்குமார் (26), புதுச்சேரி கல்மண்டபத்தை சேர்ந்த தினகரன் (24), புதுச்சேரி ஏம்பலம் பகுதியை சேர்ந்த யுவராஜ் (21), களையூரை சேர்ந்த சூர்யா (21) ஆகியோரை தூக்கணாம்பாக்கம் போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
முன்விரோத தகராறில் கணவன்-மனைவியை 7 பேர் கொண்ட கும்பல் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.