தெருநாய்கள் கடித்து சிறுமி உள்பட 7 பேர் காயம்


தெருநாய்கள் கடித்து சிறுமி உள்பட 7 பேர் காயம்
x

காவேரி ஆர்.எஸ். பகுதியில் தெருநாய்கள் கடித்து சிறுமி உள்பட 7 பேர் காயம் அடைந்தனர்.

நாமக்கல்

பள்ளிபாளையம்

7 பேர் காயம்

பள்ளிபாளையம் ஒன்றியம் ஆலாம்பாளையம் பேரூராட்சி காவேரி ஆர்.எஸ். கரட்டாங்காடு உள்ளிட்ட பகுதியில் 750-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில் அந்த பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்துள்ளது. நேற்று காவேரி ஆர்.எஸ். கரட்டாங்காடு பகுதியில் சாலையில் சென்ற 10-க்கும் மேற்பட்டோரை தெருநாய்கள் கடித்தது.

இதில் அமுதா (வயது 62), வனிதா (31), 7 வயது சிறுமி உள்ளிட்ட 7 பேர் காயம் அடைந்தனர். பின்னர் பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வீட்டுக்கு திரும்பிய நிலையில், படுகாயம் அடைந்தவர்கள் 3 பேர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வெறிநாய்கடி தடுப்பூசி

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது எங்கள் பகுதியில் சில மாதங்களாக தொடர்ந்து தெருநாய்கள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. பேரூராட்சி நிர்வாகத்தில் இதுகுறித்து பலமுறை முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே போர்க்கால அடிப்படையில், தெரு நாய்களை பிடித்துச் செல்ல வேண்டும். மேலும் அந்த தெருநாய்களுக்கு வெறிநாய் கடி தடுப்பூசி போட வேண்டும். இதனால் பெண்கள், குழந்தைகள், முதியோர் சாலையில் செல்லவே அச்சப்படுகின்றனர்.

ஆலாம்பாளையம் பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் கூறும்போது, இதுகுறித்து ப்ளூ கிராஸ் மற்றும் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பேரூராட்சி கூட்டத்திலும் தெரிவித்துள்ளோம். 2 நாட்களில் தெருநாய்கள் அட்டகாசத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என தெரிவித்தனர்.


Next Story