தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 7 பேர் கைது


தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 7 பேர் கைது
x

கரூர் மாவட்ட பகுதியில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து நகைகள் மீட்கப்பட்டு, கார், மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

கரூர்

வழிப்பறி

கரூர் மாவட்டம், செம்மடை ரவுண்டானா, மண்மங்கலம் மற்றும் வேலாயுதம்பாளையம் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் கடந்த 2 மாதங்களாக இரவு நேரங்களில் தேசிய நெடுஞ்சாலைகளில் தனியாக இருசக்கர வாகனத்தில் செல்லும் பெண்களை குறி வைத்து அவர்கள் அணிந்திருக்கும் தங்க நகைகளை வழிப்பறி செய்யும் செயல் உள்பட பல்வேறு திருட்டு சம்பவங்கள் நடந்து வந்தது.

இதையடுத்து கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம், கரூர் ஊரக உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை உத்தரவின் பேரில் வேலாயுதம்பாளையம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ஜெயராமன் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

7 பேர் கைது

விசாரணையில் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியை சேர்ந்த முகேஷ் (வயது 19), ஆகாஷ் (24), யோகேஷ் (20), ஷேக் அப்துல்லா (21), சாந்தகுமார் (19), தனுஷ் (19) மற்றும் 18 வயது சிறுவன் ஆகிய 7 பேரும் தேசிய நெடுஞ்சாலையில் பெண்களிடம் தங்கசங்கிலிகளை பறித்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து 7 பேரையும் வேலாயுதம்பாளையம் போலீசார் கைது செய்து, கரூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கடலூர் சிறையில் அடைத்தனர்.

மேலும் அவர்களிடமிருந்து 7½ பவுன் தங்கசங்கிலி மீட்கப்பட்டன. தொடர்ந்தும் அவர்கள் வழிப்பறிக்கு பயன்படுத்திய கார், மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story