ஐயப்ப பக்தர்கள் வசதிக்காக சென்னை- கோட்டயம் இடையே 7 சிறப்பு ரெயில்கள் இயக்கம்


ஐயப்ப பக்தர்கள் வசதிக்காக சென்னை- கோட்டயம் இடையே 7 சிறப்பு ரெயில்கள் இயக்கம்
x
தினத்தந்தி 19 Nov 2023 7:56 AM GMT (Updated: 19 Nov 2023 7:57 AM GMT)

ரெயில்களில் சபரிமலை செல்லும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது.

சென்னை,

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக கடந்த 17-ந்தேதி நடை திறக்கப்பட்டது. விரதம் இருந்து வரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தினந்தோறும் தரிசனத்திற்காக கோவிலில் குவிந்து வருகிறார்கள். ரெயில்களில் சபரிமலை செல்லும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது. எனவே சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில் சென்னை சென்டிரலில் இருந்து கோட்டயத்துக்கு இன்று முதல் 7 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. இன்று (19-ந்தேதி), வருகிற 26-ந்தேதி, டிசம்பர் 3-ந்தேதி, 10-ந்தேதி, 17-ந்தேதி, 24-ந் தேதி, 31-ந்தேதிகளில் சிறப்பு ரெயில்கள் (வண்டி எண்:06027) இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 1.10 மணிக்கு கோட்டயம் சென்றடையும். இந்த ரெயில்கள் அரக்கோணம், சேலம், ஈரோடு, திருப்பூர், பாலக்காடு, திரிச்சூர் வழியாக கோட்டயம் செல்லும்.

இதேபோல கோட்டயத்தில் இருந்து வருகிற 20-ந்தேதி, 27-ந்தேதி, டிசம்பர் 4-ந்தேதி, 11-ந்தேதி, 18-ந் தேதி, 25-ந்தேதி, மற்றும் அடுத்த ஆண்டு (2024) ஜனவரி 1-ந்தேதிகளில் சிறப்பு ரெயில்கள் (எண்:06028) இரவு 7 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை10.30 மணிக்கு சென்னை சென்டிரலுக்கு வந்தடையும். இதற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கி உள்ளது.


Next Story