7 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்


7 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 4 Oct 2023 7:45 PM GMT (Updated: 4 Oct 2023 7:45 PM GMT)

கம்பத்தில் 7 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தேனி

தேனி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக், பாலித்தீன் பொருட்கள் பயன்பாட்டை தடுக்க உரிய சோதனை செய்து நடவடிக்கை எடுக்க உள்ளாட்சி அதிகாரிகளுக்கு மாவட்ட கலெக்டர் ஷஜீவனா உத்தரவிட்டார். அதன்பேரில் கம்பம் நகராட்சி பகுதியில் மொத்த விற்பனை கடைகள் மற்றும் குடோன்களில் நேற்று மதியம் ஆணையர் வாசுதேவன் தலைமையில் சுகாதார அலுவலர் அரசக்குமார், ஆய்வாளர் லெனின் மற்றும் பணியாளர்கள் திடீர் சோதனை நடத்தினர். இதில் கம்பம் காந்தி சிலை அருகேயுள்ள உமர்அலி என்பவருக்கு சொந்தமான கடை மற்றும் குடோனில் மூட்டை, மூட்டையாக தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் பொருட்கள் இருப்பது கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். அதனை பறிமுதல் செய்து குடோன் உரிமையாளருக்கு ரூ.27 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

இதேபோல் கம்பம்மெட்டு சாலைபிரிவில் உள்ள பக்ரூதின், அப்பாஸ் மந்திரி ஆகியோரின் குடோன்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக், பாலித்தீன் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் உரிமையாளர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதுகுறித்து நகராட்சி ஆணையர் கூறுகையில், கம்பத்தில் பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளது. நேற்று முதற்கட்டமாக 3 குடோன்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டு சுமார் 7 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, மொத்தம் ரூ.77 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விற்பனை செய்து வந்தால் குடோனை பூட்டி 'சீல்' வைக்கப்படும் என்று உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என்றார்.


Next Story