700 கபடி வீரர்கள், 200 வீராங்கனைகள் பங்கேற்பு


700 கபடி வீரர்கள், 200 வீராங்கனைகள் பங்கேற்பு
x
தினத்தந்தி 7 Sept 2023 12:15 AM IST (Updated: 7 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை இந்திய விளையாட்டு ஆணைய மைதானத்தில் நடந்த கபடி வீரர்கள் தேர்வில் 700 வீரர்கள், 200 வீராங்கனைகள் பங்கேற்றனர்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை இந்திய விளையாட்டு ஆணைய மைதானத்தில் நடந்த கபடி வீரர்கள் தேர்வில் 700 வீரர்கள், 200 வீராங்கனைகள் பங்கேற்றனர்.

வீரர்-வீராங்கனை தேர்வு

மயிலாடுதுறை நகரின் மையப்பகுதியில், இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பயிற்சி மையம் அமைந்துள்ளது. தமிழகத்திலேயே இந்த இடத்தில் மட்டும்தான் இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பயிற்சி மையம் நிரந்தர சொந்த கட்டிடத்தில் இயங்குகிறது. கூடைப்பந்து, கைப்பந்து, கபடி மற்றும் தடகளப் போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இங்கு மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக கபடி பயிற்சியாளர் இல்லாததால் கபடி பயிற்சிக்கு மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்படாமல் இருந்தது. இதையடுத்து, இப்பயிற்சி மையத்தில் மீண்டும் கபடி விளையாட்டை சேர்க்க அமெச்சூர் கபடி கழகம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தொடர் முயற்சிகளை மேற்கொண்டனர். இந்நிலையில், இந்த ஆண்டு முதல் மயிலாடுதுறையில் மீண்டும் கபடி விளையாட்டு சேர்க்கப்படும் என்றும் இதற்கான வீரர்-வீராங்கனை தேர்வு இன்று நடைபெறும் என கடந்த மாதம் 29-ந்் தேதி அறிவிப்பு வெளியானது.

700 வீரர்கள்,200 வீராங்கனைகள்

இதையடுத்து கபடி விளையாட்டு வீரர்-வீராங்கனைக்கான தேர்வு நேற்று நடந்தது. 9 வீரர்கள், 10 வீராங்கனைகளை தேர்வு செய்வதற்காக நடைபெற்ற இத்தேர்வில் 700 வீரர்கள் மற்றும் 200 வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடினர்.இதில் தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க துணைத் தலைவரும், அமெச்சூர் கபடி கழக மாநில தலைவருமான சோலைராஜா கலந்துகொண்டு, பொறுக்குத்தேர்வை தொடங்கி வைத்து பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் மயிலாடுதுறையில் மட்டும்தான் இந்திய விளையாட்டு ஆணையத்தின் பயிற்சியகம் நிரந்தரமாக செயல்படுகிறது. சேலம் உள்ளிட்ட பிற இடங்களில் தமிழக விளையாட்டு ஆணைய இடத்தில்தான் செயல்படுகிறது. எனவே, முதற்கட்டமாக கபடி விளையாட்டுக்கு சென்டர் ஆப் எக்ஸலன்ஸி தொடங்க வேண்டும் என்றார்.


Next Story