ஜல்லிக்கட்டில் 704 காளைகள் சீறிப்பாய்ந்தன; 27 பேர் காயம்


ஜல்லிக்கட்டில் 704 காளைகள் சீறிப்பாய்ந்தன; 27 பேர் காயம்
x
தினத்தந்தி 22 May 2022 8:11 PM GMT (Updated: 22 May 2022 10:10 PM GMT)

ஜல்லிக்கட்டில் 704 காளைகள் சீறிப்பாய்ந்தன. காளைகள் முட்டியதில் 27 பேர் காயமடைந்தனர்.

திருச்சி

திருவெறும்பூர்:

704 காளைகள்

திருவெறும்பூர் அருகே உள்ள தெற்கு காட்டூர் பாலாஜி நகரில் அழகுமுத்து மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. ஜல்லிக்கட்டை திருச்சி வருவாய் கோட்டாட்சியர் தவசெல்வம் தொடங்கி வைத்தார். திருவெறும்பூர் தாசில்தார் ரமேஷ் முன்னிலை வகித்தார். தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

ஜல்லிக்கட்டில் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கரூர், மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 704 காளைகள் பங்கேற்றன. இதேபோல் 256 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். காலை 9 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு மாலை 4 மணி வரை விறுவிறுப்பாக நடைபெற்றது.

27 பேர் காயம்

வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கினர். சில காளைகள் வீரர்களிடம் பிடிபடாமல் சென்றன. சில காளைகள் பிடிக்க வந்த வீரர்களை முட்டித்தூக்கி வீசின. காளைகள் முட்டியதில் 27 பேர் காயமடைந்தனர். இதில் படுகாயத்துடன் இருந்த மாடுபிடி வீரர்கள் 4 பேர், காளையின் உரிமையாளர்கள் 5 பேர், பார்வையாளர் ஒருவர் என மொத்தம் 10 பேரை திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

இதில் திண்டுக்கல் மாவட்டம் வல்லியபாறப்பட்டி பெரியகோட்டை பகுதியை சேர்ந்த முத்து(வயது 32) உள்பட 2 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். காயமடைந்த 17 பேரும் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

பரிசு பொருட்கள்

காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் ரொக்கப்பணம், டி.வி, குக்கர், மின்விசிறி, கட்டில், டைனிங் டேபிள், டிரசிங் டேபிள், அண்டா என பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு ஜல்லிக்கட்டை கண்டு ரசித்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஜல்லிக்கட்டு பேரவை குழுவினர் செய்திருந்தனர். ஜல்லிக்கட்டில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக, துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயசீலன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story