'ஆபரேஷன் மறுவாழ்வு' மூலம் 726 பேர் மீட்பு - போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு தகவல்


ஆபரேஷன் மறுவாழ்வு மூலம் 726 பேர் மீட்பு - போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு தகவல்
x

தமிழ்நாடு காவல் துறையின் ‘ஆபரேஷன் மறுவாழ்வு’ என்ற அதிரடி நடவடிக்கையின் கீழ் 726 பிச்சைக்காரர்கள் மீட்கப்பட்டுள்ளதாக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் உள்ள நகர்ப்புற சாலை சந்திப்புகளிலும், புறவழிச்சாலை சுங்கச்சாவடிகளிலும் பெண்களையும், குழந்தைகளையும் வைத்து பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவர்களை சில கும்பல்கள் இந்த தொழிலில் ஈடுபட வைக்கின்றனர். இதை தடுத்து நிறுத்தும் வகையில் 'ஆபரேஷன் மறுவாழ்வு' என்ற அதிரடி நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் 9 போலீஸ் கமிஷனரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நேற்று அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 726 பிச்சைக்காரர்கள், 16 குழந்தைகள் மீட்கப்பட்டனர்.

இவர்களை இந்த தொழிலில் ஈடுபடுத்திய நபர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மீட்கப்பட்ட பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு இல்லத்துக்கும், குழந்தைகள் காப்பகத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். 150 பேர் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

ஏழை பெண்களையும், குழந்தைகளையும் பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபடுத்தும் நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள். சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் போன்ற நகரங்கள் மற்றும் வெகு தூரங்களில் இருந்து பெண்கள் மற்றும் குழந்தைகளை அழைத்து வந்து பிச்சை எடுக்க வைக்கும் ஆள் கடத்தல் கும்பல் பற்றி தகவல் தெரிந்தால் 044-28447701 என்ற எண்ணில் தெரிவிக்கலாம். நல்ல தகவல் தருபவர்களுக்கு பண வெகுமதி அளிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story