மதுரையில் நாடார் மகாஜன சங்க 72-வது மாநாடு தொடங்கியது; தெலுங்கானா கவர்னர் தமிழிசை, தலைவர்கள் பங்கேற்பு


மதுரையில் நாடார் மகாஜன சங்க 72-வது மாநாடு தொடங்கியது; தெலுங்கானா கவர்னர் தமிழிசை, தலைவர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 27 Jan 2024 11:45 PM GMT (Updated: 27 Jan 2024 11:45 PM GMT)

நாடார் மகாஜன சங்கம் பல்வேறு கல்விச்சேவைகளை வழங்கி வருகிறது என்று தொல்.திருமாவளவன் கூறினார்.

மதுரை,

நாடார் மகாஜன சங்கத்தின் 72-வது மாநாடு, மதுரை நாகமலைப்புதுக்கோட்டையில் உள்ள வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் நேற்று தொடங்கியது. சங்க தலைவர் குருசாமி வெள்ளையன் கொடியேற்றினார்.

தெலுங்கானா-புதுச்சேரி மாநிலங்களின் கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் பலர் பேசினர். விருந்தினா்களை நாடார் மகாஜன சங்க பொதுச்செயலாளர் கரிக்கோல் ராஜ் தலைமையில் குழுவினர் வரவேற்றனர்.

தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:-

இந்திய வரலாற்றிலேயே குடியரசு தினத்தில் தெலுங்கானா, புதுச்சேரியில் என 2 மாநிலங்களில் தேசிய கொடியேற்றி வைத்துவிட்டு, 2 மாநில முதல்-மந்திரிகளுக்கும் தேனீர் விருந்து அளித்தேன். தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் இருக்கிறது. இருந்தாலும், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக ஓடோடி வந்தேன்.

நான் பா.ஜனதாவில் சேர்ந்தபோது, என் அப்பா ஒரு ஆண்டு என்னிடம் பேசாமல் இருந்தார். ஆனால் நான், பெருந்தலைவர் காமராஜரை பின்பற்றி துணிவோடு செயல்பட்டேன். நாடார் சமுதாயம் பற்றிய ஆய்வில், பின்தங்கி இருந்த சமூகம் முன்னேறி வந்ததற்கு முக்கிய காரணம் கல்விதான். நாடார் சமூகத்தினர் தாங்கள் கல்வி கற்றதோடு மட்டுமல்லாமல் மற்றவர்களுக்கும் கல்வி கொடுத்தார்கள். பள்ளி-கல்லூரியை திறந்தார்கள். அன்று தெலுங்கானா முதல்-மந்திரிக்கு (சந்திரசேகர் ராவ்) நான் சிம்ம சொப்பனமாக இருந்தேன். அவர் 3 ஆண்டுகளாக கவர்னரான என்னை புறக்கணித்தார். ஆனால் இன்று மக்கள் அவரை புறக்கணித்துவிட்டனர்.

தமிழகம் கல்வியில் முன்னேறி இருப்பதற்கு காமராஜர்தான் காரணம். ஆடு மேய்த்துக்கொண்டு இருந்தவர்களையும் அவர் படிக்க வைத்தார். நாடார் சமுதாயத்தினர் வியாபாரம் செய்தார்கள். ஆனால் இப்போது கல்லூரி தாளாளர்கள், பத்திரிகை உரிமையாளர்கள், பெரிய நிறுவனம் வைத்திருப்பவர்களாக இருக்கிறார்கள். இந்த சமூகம் இன்னும் ஒற்றுமையோடு செயல்பட்டால் இன்னும் பெரும் வெற்றியை பெற முடியும்.

பத்திரிகையை எடுத்துக்கொண்டால் 'தினத்தந்தி'யை பாமர மக்கள் அனைவரும் படிக்கிறார்கள். மக்களுக்கான செய்தியை தினத்தந்தி கொண்டு சேர்க்கிறது.

நாடார் சமூகத்திடம் தீவிர சக்தி இருக்கிறது. சங்கராச்சாரியார் ஒருமுறை பேசும் போது, "கடினமாக உழைப்பவர்கள், நாடார்கள்" என்று பெருமையோடு சொன்னார். அனைவரும் மகிழ்ச்சியோடு இருக்க வேண்டும். ராமர் கோவில் எழுப்பப்பட்டு இருக்கிறது. ராமரின் முகம் தாமரை போல் இருக்கும் என்று கம்பர் சொன்னார். எனக்கு தலையில் வைக்க மல்லிகைப்பூ பிடிக்கும். ஆனால் தேசிய மலர் தாமரையை எப்போதும் பிடிக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மாநாட்டில் தொல்.திருமாவளவன் பேசியதாவது:-

எங்களது கட்சி மாநாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினோம். அதன் மூலம்தான் ஒவ்வொரு சமூகத்தின் மக்கள் தொகை எண்ணிக்கை தெரிய வரும். அதன் அடிப்படையில் அரசு நிர்வாகத்தில் மட்டுமின்றி கட்சி நிர்வாகத்திலும் உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கும். நாடார் சமூகத்துக்கு உரிய பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என்கிற ஆசை எங்களுக்கும் உண்டு. கல்வி என்றால் காமராஜர்.

காமராஜர் என்றால் கல்வி. இது அனைவரும் அறிந்த உண்மை. அதனால் காமராஜர் பிறந்த நாளை கல்வித்திருநாளாக கொண்டாடுகிறோம். கல்விதான் அழியாத செல்வம். எவராலும் ஆக்கிரமிக்க முடியாத செல்வம். கல்வி இருந்தால் தன்மானம் பெருகும். சாதி-மத அடையாளங்களை எல்லாம் மறந்து சகோதரத்துவம் பெருகும். கட்சியை வலுப்படுத்த காமராஜர் முதல்-அமைச்சர் பதவியை துறந்தார். அதற்கு 'காமராஜர் பிளான்' என்று பெயர் வைத்தார்கள். காமராஜரை பின்பற்றி பல பேர் பதவியை துறந்து கட்சிப்பணியாற்ற வந்தார்கள். நாடார் மகாஜன சங்கம் பல்வேறு கல்விச்சேவைகளை வழங்கி வருகிறது. நாடார்கள் தொழில், கல்வி ஆகியவற்றில் சிறந்து விளங்குகிறார்கள். அது போல் அரசியலிலும் முக்கிய பங்காற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

2-வது நாளாக இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) மாநாடு நடக்கிறது. அமைச்சர்கள், அரசியல் பிரமுகர்கள் பங்கேற்று பேசுகிறார்கள். தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன.


Next Story