பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கத்தினர் 74 பேர் கைது


பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கத்தினர் 74 பேர் கைது
x

சாதி சான்றிதழ் கேட்டு கடலூரில் இருந்து சென்னைக்கு நடைபயணம் செல்ல முயன்ற பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கத்தினர் 74 பேரை போலீசார் கைது செய்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர்


பழங்குடி இருளர் உள்ளிட்ட அனைத்து நலிந்த பிரிவினருக்கும் விரைவில் சாதி சான்றிதழ், நலவாரிய அட்டை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூரில் இருந்து சென்னை கோட்டை நோக்கி நடைபயணம் செல்ல இருப்பதாக பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கத்தினர் அறிவித்து இருந்தனர். இதனால் கடலூர் கோட்டாட்சியர் நேற்று முன்தினம் அவர்களை அழைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்.

கூட்டத்தில் சமரச பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், திட்டமிட்டபடி 14-ந் தேதி (அதாவது நேற்று) கடலூரில் இருந்து சென்னை நோக்கி நடைபயணம் மேற்கொள்ளப்படும் என பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கத்தினர் தெரிவித்தனர்.

74 பேர் கைது

அதன்படி நடைபயணம் மேற்கொள்வதற்காக நேற்று காலை பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கத்தினர், சங்க ஒருங்கிணைப்பாளர் பாபு தலைமையில் கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகில் ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து நடைபயணம் மேற்கொள்ள முயன்றனர். உடனே கடலூர் புதுநகர் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர் 30 பெண்கள் உள்பட 74 பேரை போலீசார் கைது செய்து, வேனில் ஏற்றிச்சென்று மஞ்சக்குப்பத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் அடைத்தனர். இதையடுத்து கைதான அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story