சென்னை விமான நிலையத்தில் ரூ.75 லட்சம் தங்கம் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் ரூ.75 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் ரூ.40½ லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மீனம்பாக்கம்,
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக வந்த தகவலின்பேரில் சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது துபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த வாலிபரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் அவர் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர்.
ரூ.75 லட்சம் தங்கம்
அதில் எதுவும் இல்லாததால் தனியறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர். அதில் அவர், உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டனர்.
அவரிடம் இருந்து ரூ.74 லட்சத்து 90 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 460 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
வெளிநாட்டு பணம்
அதேபோல் சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு செல்ல இருந்த விமானத்தில் பயணம் செய்ய வந்த 2 வாலிபர்களின் உடைமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அவர்களிடம் இருந்த கைப்பையில் கட்டுக்கட்டாக வெளிநாட்டு பணம் இருந்தன. அவர்களிடம் இருந்து ரூ.40 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள யூரோ, பவுண்டு, திர்காம்ஸ் ஆகிய வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் நடத்திய சோதனையில் 3 பேரிடம் இருந்து ரூ.1 கோடியே 15 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெளிநாட்டு பணத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 3 பேரையும் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.