மருத்துவ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை; ரூ.6 லட்சம், 28 தங்க காசுகள் பறிமுதல்


மருத்துவ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை; ரூ.6 லட்சம், 28 தங்க காசுகள் பறிமுதல்
x

தீபாவளி பண்டிகையையொட்டி ஓட்டேரியில் உள்ள மண்டல நிர்வாக மருத்துவ அலுவலகத்தில் நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனையில் கணக்கில் வராத ரூ.6 லட்சம் மற்றும் 28 தங்க காசுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

திரு.வி.க.நகர்,

சென்னை ஓட்டேரி ஜமாலியாவில் மண்டல நிர்வாக மருத்துவ அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் கீழ் 35 அரசு மருந்தகங்கள் இயங்கி வருகின்றன. அரசு மருந்தகங்களுக்கு தேவையான மருத்துவ உபகரணங்களை வழங்குவது மண்டல நிர்வாக மருத்துவ அலுவலகத்தின் வேலை.

இந்தநிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் அரசு அலுவலகங்களில் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி நேற்று மதியம் மருத்துவ மண்டல அதிகாரி டாக்டர் திருநாவுக்கரசு அலுவலக அறையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீரென சோதனை செய்தனர்.

அப்போது அங்கு நிறுத்தி இருந்த வாகனத்தில் கணக்கில் வராத ரூ.6 லட்சம் மற்றும் 28 தங்க காசுகள் இருந்தது. அதனை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார், இது தொடர்பாக டாக்டர் திருநாவுக்கரசிடம் விசாரித்து வருகின்றனர்.

சார்பதிவாளர் அலுவலகம்

அதேபோல் சென்னை போரூரை அடுத்த கெருகம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பெரிய சடையாண்டி. இவர், இந்துமதி என்பவரது நிலத்துக்கு பவர் வாங்கி பதிவு செய்வதற்கு பூந்தமல்லி சார் பதிவாளர் அலுவலகத்தை அணுகினார். பவர் பத்திரம் பதிவு செய்வதற்கு அவரிடம் அங்கிருந்தவர்கள் ரூ.30 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து காஞ்சீபுரம் சிறப்பு தாசில்தாரிடம் பெரிய சடையாண்டி புகார் கொடுத்தார். அந்த புகார் மனு ஆலந்தூர் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கிடையில் பெரிய சடையாண்டி நேற்று பூந்தமல்லி சார் பதிவாளர் அலுவலகத்துக்கு சென்று ரூ.30 ஆயிரம் லஞ்சமாக கொடுத்ததாக தெரிகிறது.

ரூ.30 ஆயிரம் பறிமுதல்

இதையறிந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று காலை 11 மணியளவில் திடீரென பூந்தமல்லி சார் பதிவாளர் அலுவலகத்துக்குள் நுழைந்து கதவை உள்புறமாக பூட்டி விட்டு சோதனையிட்டனர். உள்ளே இருந்தவர்களை வெளியே செல்லவும், வெளியில் உள்ளவர்கள் உள்ளே செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டது.

ஒருபுறம் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்து கொண்டிருந்தனர். மற்றொருபுறம் பத்திரப்பதிவு செய்ய வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு ஒவ்வொருவராக அனுமதிக்கப்பட்டு பத்திரப்பதிவும் நடந்தது.

மாைல 6 மணிவரை சுமார் 7 மணிநேரம் நடைபெற்ற இந்த சோதனையில் சார்பதிவாளர் அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத ரூ.30 ஆயிரத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செயதனர்.

இது தொடர்பாக சார் பதிவாளர் மற்றும் அலுவலக ஊழியர்களிடம் விசாரணை நடத்திவிட்டு சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story