கோவை சாடிவயலில் புதிய யானைகள் முகாம் அமைக்க ரூ.8 கோடி -அரசாணை வெளியீடு


கோவை சாடிவயலில் புதிய யானைகள் முகாம் அமைக்க ரூ.8 கோடி -அரசாணை வெளியீடு
x

கோவை, போலாம்பட்டி காப்புக்காடு பகுதியில் உள்ள சாடிவயலில் புதிய யானைகள் முகாம் அமைக்க ரூ.8 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக சுப்ரியாசாகு தெரிவித்துள்ளார்.

சென்னை,

கோவை, போலாம்பட்டி காப்புக்காடு பகுதியில் உள்ள சாடிவயலில் புதிய யானைகள் முகாம் அமைக்க ரூ.8 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 2012-ம் ஆண்டு முதல் தற்காலிக யானைகள் முகாமாக ஏற்கனவே செயல்பட்டு வரும் சாடிவயலில், புதிய யானைகள் முகாம் அமைப்பதாக முதல்-அமைச்சர் மார்ச் 15-ந் தேதி வெளியிட்ட அறிவிப்பின் படி இந்த ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

யானை கொட்டகைகள், கால்நடை மருத்துவ வசதிகள், சமையலறை மற்றும் யானை புகா அகழிகள், யானைகளுக்கான உணவு மற்றும் தண்ணீர் வசதிகள் ஆகியவற்றை உருவாக்க இந்த தொகை பயன்படுத்தப்படும். இதன் மூலம் யானைகளுக்கான பாதுகாப்பு முயற்சிகளை வலுப்படுத்தும் தமிழ்நாடு அரசின் கொள்கையின்படி, முகாம் யானைகளின் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை குறிப்பிடத்தக்க அளவில் மேம்படும். தேவையான வசதிகளுடன் கூடிய சிறப்பு போக்குவரத்து உள்பட மீட்பு பணியினை வலுப்படுத்துதல் இதன் நோக்கமாகும்.

47 வீடுகள் கட்டப்படும்

பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள கோழிகமுத்தி யானைகள் முகாமை மேம்படுத்தவும் அரசு ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்து ஆணை வெளியிட்டுள்ளது. இத்தொகை, முகாமில் உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல், யானை பராமரிப்பாளர்கள் மற்றும் காவடிகளுக்கான பயிற்சி, பார்வையாளர்களுக்கான காட்சி கூடம் அமைத்தல், உணவு தயாரிக்கும் பகுதியை மேம்படுத்துதல் மற்றும் யானைகளுக்கான குடிநீர் வசதி ஆகியவற்றுக்கு பயன்படுத்தப்படும்.

இதுதவிர, மார்ச் 15-ந் தேதி முதல்-அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பின்படி, தெப்பக்காடு மற்றும் கோழிகமுத்தி யானைகள் முகாமில் உள்ள 91 யானை பராமரிப்பாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு சூழலுக்கு ஏற்ற சமூக இணக்கமான வீடுகள் கட்டுவதற்கு ரூ.9.10 கோடியை அரசு அனுமதித்தும் ஆணை வெளியிட்டுள்ளது.

முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் காப்பக பராமரிப்பாளர்களுக்கு 44 வீடுகளும், பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள கோழிகமுத்தி யானைகள் காப்பகத்தில் 47 வீடுகளும் கட்டப்படும்.

சிறப்பு பயிற்சி

கடந்த ஆண்டு புதிய யானைகள் காப்பகமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் 1,19,748.26 ஹெக்டேர் பரப்பளவில் உள்ள அகத்தியர் மலைப்பகுதியை அகத்தியர் மலை யானைகள் காப்பகம் எனும் பெயரில் புதிய யானைகள் காப்பகமாக அரசு அறிவித்தது. இந்த ஆண்டு தாய்லாந்து நாட்டிற்கு 13 யானை பராமரிப்பாளர்கள் மற்றும் காவடிகள் குழு ஒன்றை தமிழ்நாடு அரசு முதன் முறையாக சிறப்பு பயிற்சிக்காக அனுப்பியுள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story