ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 8 கிலோ கஞ்சா பறிமுதல்
ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
ரகசிய தகவல்
புதுக்கோட்டை மாவட்டத்தில் கஞ்சா கடத்தலை தடுக்கும் வகையில் போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் ஆந்திராவில் இருந்து புதுக்கோட்டைக்கு லாரியில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக புதுக்கோட்டை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மேலும் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே லெட்சுமணப்பட்டி சோதனை சாவடி அருகே அந்த கஞ்சா கைமாற இருப்பதாகவும் தெரிந்தது. இதையடுத்து புதுக்கோட்டை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலாஜி நேற்று விரைந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டார்.
8 கிலோ கஞ்சா பறிமுதல்
அப்போது சந்தேகப்படும்படி வந்த நபரை பிடித்து சோதனை செய்த போது அவர் கொண்டு வந்த பையில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் மொத்தம் 8 கிலோ கஞ்சா இருந்தது. மேலும் போலீசார் விசாரணையில் அவர் திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளியை சேர்ந்த லாரி டிரைவர் பாலசுப்பிரமணியன் (வயது 52) என்பது தெரியவந்தது.
இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்து போலீசார் அவரை கைது செய்தனர். அவர் ஆந்திராவில் இருந்து லாரிகளில் மாறி, மாறி புதுக்கோட்டை வந்ததாகவும், இங்குள்ள நபரிடம் பையை கொடுக்க சொல்லி அனுப்பி வைத்ததாகவும், இங்கு அந்த பையை வாங்க வரக்கூடிய நபர் தனக்கு யார் என தெரியாது என்று போலீசில் அவர் தெரிவித்திருக்கிறார். தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.