திருச்சி விமான நிலையத்தில் 8 கிலோ கடத்தல் தங்கம் சிக்கியது
திருச்சி விமான நிலையத்தில் மத்திய வருவாய் வான்நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் 6 விமானங் களில் நடத்திய அதிரடி சோதனையில் 8 கிலோ கடத்தல் தங்கம் சிக்கியது.
திருச்சி விமான நிலையத்தில் மத்திய வருவாய் வான்நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் 6 விமானங் களில் நடத்திய அதிரடி சோதனையில் 8 கிலோ கடத்தல் தங்கம் சிக்கியது.
தங்கம் கடத்தல்
திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், அபுதாபி, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், இண்டிகோ, ஸ்கூட், ஏர் ஏசியா உள்ளிட்ட நிறுவனங்கள் மூலம் மேற்கண்ட நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படுகிறது. இவை தவிர சென்னை, ஐதராபாத், பெங்களூரு, புதுடெல்லி உள்ளிட்ட நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்படுகிறது. இந்த நிலையில் வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வரும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது.
6 விமானங்களில் சோதனை
இந்த கடத்தல் சம்பவங்களை தடுக்க மத்திய வருவாய் வான்நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதிகாரிகள் நடத்தும் சோதனையில் அடிக்கடி தங்க கடத்தல்காரர்கள் பிடிபட்டு வருகிறார்கள். குறிப்பாக மலேசியா, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட நாடுகளில் இருந்து தங்கம் அதிக அளவில் கடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தநிலையில் கோலாலம்பூர், சிங்கப்பூர், சார்ஜா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் விமானங்களில் தங்கம் கடத்தி வருவதாக புகார்கள் வந்தது. அதன்படி நேற்று முன்தினம் இரவு கோலாலம்பூரில் இருந்து வந்த 2 விமானங்கள், சிங்கப்பூரில் இருந்து வந்த 3 விமானங்கள், சார்ஜாவில் இருந்து வந்த ஒரு விமானம் உள்ளிட்ட 6 விமானங்களில் வான்நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
8 கிலோ தங்கம் பறிமுதல்
இதில் சுமார் 25 பயணிகளின் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டது. அவர்களது உடைமைகளை சோதனை நடத்தியதில் சுமார் 8 கிலோ தங்கம் சிக்கியது. அவர்கள் உடலில் மறைத்தும், சில பொருட்களில் மறைத்து வைத்தும் தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடு்த்து அதிகாரிகள் 8 கிலோ தங்கத்தையும் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.3¾ கோடி ஆகும். மேலும் தங்கத்தை கடத்தி வந்த 25 பேரிடமும் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.