பெண்ணாடம் பகுதியில்கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டிய 8 பேர் கைதுகத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்
பெண்ணாடம் பகுதியில் கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டிய 8 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
பெண்ணாடம்,
மது அருந்திய கும்பல்
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார், சப்-இன்ஸ்பெக்டர் பிரகஸ்பதி, பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் தாமரைக்கண்ணன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சின்னதுரை ஆகியோர் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவு பெண்ணாடம் அடுத்த வடகரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வடகரையில் இருந்து நரசிங்கமங்கலம் செல்லும் கிராம சாலையோர வயலில் உள்ள கொட்டகை ஒன்றில் 5-க்கும் மேற்பட்ட நபர்கள் கொண்ட கும்பல் முகத்தில் மங்கி கேப் அணிந்தபடி அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தனர்.
இதைபார்த்த, போலீசார் கொட்டகையை நோக்கி சென்றனர். போலீசார் வருவதை பார்த்ததும் அந்த கும்பல் அங்கிருந்து ஓட்டம் பிடித்தது. இதனால் உஷாரான போலீசார் அந்த கும்பலை விரட்டிச் சென்று, சுற்றி வளைத்து 8 பேரை மடக்கி பிடித்தனர். ஒருவர் மட்டும் தப்பியோடிவிட்டார். பிடிபட்ட 8 பேரையும் போலீசார் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
சதித்திட்டம்
விசாரணையில், அவர்கள் கரூர் மாவட்டம் பசுபதிபாளையம் வடக்கு தெருவை சேர்ந்த முனியப்பன் மகன் ராஜசேகரன் (வயது 23), கணேசன் மகன் வடிவேலு(35), திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள சிங்கார சோலை பார்வதிபுரத்தைச் சேர்ந்த கந்தசாமி மகன் தனபால் (29), கரூர் மாவட்டம் பாளையம் முனிசிபல் காலனி பகுதியை சேர்ந்த ரமேஷ் குமார் மகன் கவுதம் வினித் (30), திருநெல்வேலி மாவட்டம் தேவிபட்டினம் மேட்டு தெருவை சேர்ந்த பாலமுருகன் மகன் கார்த்திக் குமார் (18), தஞ்சாவூர் வண்டிக்கார தெருவை சேர்ந்த பரமசிவம் மகன் ரவி (50), தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை கருணாநிதி ஆர்ச் மெயின் ரோட்டை சேர்ந்த விஜயகுமார் மகன் செந்தில் குமார் (39), கரூர் மாவட்டம் ராமானூர் வெற்றி தியேட்டர் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் மகன் கார்த்திக் (24) ஆகியோர் என்பதும், தப்பி ஓடியவர் மாந்திரீக தொழிலில் ஈடுபட்டு வரும் பெண்ணாடம் அடுத்த கோனூரை சேர்ந்த மாரிமுத்து மகன் பாலு என்பதும் தெரிய வந்தது. மேலும் இவர்கள் கூட்டாக மது அருந்திவிட்டு மங்கி கேப் அணிந்து பெண்ணாடம் பகுதியில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுவதற்காக சதித்திட்டம் தீட்டியதும் தெரிய வந்தது.
உதவி போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு
இதையடுத்து அவர்கள் 8 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே கொட்டகையில் கிடந்த உருட்டு கட்டைகள், இரும்பு கம்பிகள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் மற்றும் மாந்திரீகம் செய்வது தொடர்பான புத்தகங்கள், சில பெண்களின் புகைப்படங்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய பாலுவை போலீசார் தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வருகிறார்கள். கொள்ளை சம்பவத்தில் ஈடுபட சதித்திட்டம் தீட்டிய 8 பேர் கொண்ட கும்பலை அதிரடியாக கைது செய்த பெண்ணாடம் போலீசாரை விருத்தாசலம் உதவி போலீஸ் சூப்பிரண்டு அங்கீத் ஜெயின் பாராட்டினார். கொள்ளை சம்பவத்தில் ஈடுபட முயன்ற 8 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தசம்பவம் பெண்ணாடம் பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குற்ற வழக்குகள்
கைதான கார்த்தி என்பவர் மீது கோவை போலீஸ் நிலையத்தில் 5 திருட்டு வழக்குகளும், கரூர் மாவட்டத்தில் ஒரு திருட்டு வழக்கும் உள்ளது. கார்த்திக்குமார் மீது பல்லடம் போலீஸ் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கு உள்ளது. வடிவேலு என்பவர் மீது கரூர் மாவட்டத்தில் ஏ.டி.எம். எந்திரத்தின் கண்ணாடியை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட வழக்கு உள்ளது. கவுதம் வினித் என்பவர் மீது கரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு போலீஸ் நிலையத்தில் கவரிங் நகையை தங்க நகை என ஏமாற்றிய வழக்கு நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.