இருதரப்பினரிடையே மோதல் வழக்கில் 8 பேர் கைது
மூங்கில்துறைப்பட்டில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
மூங்கில்துறைப்பட்டு,
மூங்கில்துறைப்பட்டு அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த இளைஞர்களுக்கும் பொரசப்பட்டு பகுதியை சேர்ந்த இளைஞர்களுக்கும் இடையே நேற்று முன்தினம் வாய் தகராறு ஏற்பட்டது. இதில் இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டனர். அவர்களை மூங்கில்துறைப்பட்டு போலீசார் சமாதானப்படுத்தினர். இந்த நிலையில் பொரசப்பட்டு பகுதியை சேர்ந்த இளைஞர்கள் மூங்கில்துறைப்பட்டு அம்பேத்கர்நகருக்கு வந்து அங்குள்ள வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை சூறையாடியதோடு, வெளியில் நிறுத்தி வைத்திருந்த வாகனங்கள் மற்றும் குடிநீர் குழாய்களை அடித்து நொறுக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்த தகவலின் பேரில் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி, இன்ஸ்பெக்டர் பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் பசலைராஜ் மற்றும் போலீசார் தகராறில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரணை நடத்தினர். இதனிடையே இது குறித்து மூங்கில்துறைப்பட்டு அம்பேத்கார் நகரை சேர்ந்த வேலு (வயது 53) அளித்த புகாரின் பேரில் கோவிந்தராஜ், சீனூவாசன், மணிகண்டன், ரமேஷ், கணேஷ், சடையன், சிலம்பரசன், கர்ணன், ராஜவேல், திவாகர், செந்தமிழ்ச்செல்வன், பிரகாஷ், சூர்யா, திருமலை, ரவி, சவுந்தர், சரத்குமார் உள்ளிட்ட 23 பேர் மீதும், பொரசப்பட்டை சேர்ந்த விக்ரம் (21) அளித்த மற்றொரு புகாரின் பேரில் ஜீவா, ஸ்ரீகாந்த் உள்பட 12 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் ஜீவா, கணேசன், சடையன், சிலம்பரசன், ரவி, ரமேஷ், ஜெயக்குமார், முருகன் ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.