ஸ்கூட்டரில் சென்ற பெண் டாக்டரிடம் 8 பவுன் நகைகள் பறிப்பு
ஸ்கூட்டரில் சென்ற பெண் டாக்டரிடம் 8 பவுன் நகைகளை வாலிபர்கள் பறித்து சென்றனர்.
ஈரோடு மாவட்டம் பவானி பழனிபுரம் முதல் தெருவை சேர்ந்தவர் அருண் பிரசாத். இவரது மனைவி யாழினி (வயது 30). டாக்டரான இவர் பெரம்பலூரை அடுத்த சிறுவாச்சூரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் எம்.டி. பட்ட மேற்படிப்பு முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
இவர் நேற்று இரவு மருத்துவ கல்லூரி விடுதியில் இருந்து பெரம்பலூருக்கு தனது ஸ்கூட்டரில் வந்து கடையில் பொருட்கள் வாங்க சென்றார். பின்னர் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து திருச்சி-சென்னை புறவழிச்சாலை செல்லும் வழியில் வீடு ஏதேனும் வாடகைக்கு உள்ளதா? என்று விசாரிப்பதற்காக அபிராமபுரம் வடக்கு தெரு நுழைவு வாயில் அருகே சென்றார்.
அப்போது பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள், திடீரென டாக்டர் யாழினியின் ஸ்கூட்டரை வழிமறித்தனர். மேலும் அவரை மிரட்டி அவர் அணிந்திருந்த தாலிக்கொடி மற்றும் மோதிரம் என 8 பவுன் நகைகளை பறித்தனர். பின்னர் மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றனர்.
இது குறித்து டாக்டர் யாழினி பெரம்பலூர் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து பெரம்பலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சஞ்சீவ்குமார், பெரம்பலூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.