சின்னசேலத்தில் காலாவதியான பொருட்கள் விற்ற 8 கடைகளுக்கு அபராதம்
சின்னசேலத்தில் காலாவதியான பொருட்கள் விற்ற 8 கடைகளுக்கு அபராதம் விதித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
சின்னசேலம்,
ஆய்வு
உணவு பாதுகாப்பு துறை ஆணையர் உத்தரவுப்படி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் வழிகாட்டுதலின் படி கள்ளக்குறிச்சி மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் சுகந்தன் தலைமையில் சின்னசேலம் உணவு பாதுகாப்பு அலுவலர் அன்பு பழனி, உளுந்தூர்பேட்டை உணவு பாதுகாப்பு அலுவலர் கதிரவன், திருக்கோவிலூர் உணவு பாதுகாப்பு அலுவலர் சண்முகம் ஆகியோர் கொண்ட குழுவினர் சின்னசேலத்தில் உள்ள செங்குந்தர் நகர், சேலம் மெயின்ரோடு, ரெயில் நிலைய ரோடு, மூங்கில்பாடி சாலையில் உள்ள பேக்கரி கடைகள் மற்றும் ஓட்டல்களில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அரசால் அங்கன்வாடி மையத்திற்கு விநியோகம் செய்யப்படும் சுமார் 90 முட்டைகள், நியாயவிலைக்கடைகள் மூலம் வழங்கப்பட்ட உப்பு பாக்கெட்டுகள், வீட்டு சமையலுக்கு உபயோகப்படுத்தும் எரிவாயு சிலிண்டரை கடைகளுக்கு பயன்படுத்தியதை கண்டுபிடித்தனர்.
8 கடைகளுக்கு அபராதம்
தொடர்ந்து அதிக செயற்கை நிற மூட்டிய காரவகைகள், காலவதியான உணவு பொருட்கள், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாக்கெட்டுகள் 13 கிலோ ஆகியவற்றை பறிமுதல் செய்து, அழித்தனர். பின்னர், 8 கடைகளுக்கு ரூ.18 ஆயிரம் அபராதமும், 14 கடைகளுக்கு எச்சரிக்கை நோட்டீசும் வழங்கப்பட்டது. அப்போது உணவு பாதுகப்பு அதிகாரிகள் கூறுகையில், தரமான உணவுப் பொருட்கள் சுகாதாரமான முறையில் தயாரித்து விற்பனை செய்ய வேண்டும். விற்பனை உரிமம் அவசியம் பெற்று இருக்க வேண்டும். உணவு தயாரிப்பவர்கள் மருத்துவ சான்று பெற்றிருக்க வேண்டும் போன்ற உணவு பாதுகாப்பு சம்பந்தமான ஆலோசனைகளை கடையின் உரிமையாளர்களுக்கு வழங்கினர்.