8-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை
திருவெண்ணெய்நல்லூர் அருகே பிறந்தநாளை கொண்டாட செலவுக்கு தாய் பணம் தராததால் விரக்தி அடைந்த 8-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவெண்ணெய்நல்லூர்,
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள ஆனத்தூர் காலனி பால்வாடி தெருவை சேர்ந்தவர் ராஜா மகன் செல்லப்பன்(வயது 14). இவன் ஆனத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று செல்லப்பனுக்கு பிறந்தநாள் ஆகும். இதையடுத்து மாலையில் பள்ளிக்கூடத்தில் இருந்து வீடு திரும்பிய அவன் தனது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக தனது அம்மா மஞ்சுளாவிடம் பானி பூரி வாங்க பணம் கேட்டான். அதற்கு குடும்பம் கஷ்டமா இருப்பதாக கூறி பணம் தர மறுத்துவிட்டார்.
தூக்குப்போட்டு தற்கொலை
இதனால் ஆத்திரம் அடைந்த செல்லப்பன் அவரிடம் வாக்கு வாதம் செய்தான். சில நிமிடங்களுக்கு பிறகு தனது வீட்டில் புடவையால் தூக்குப்போட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்தான். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவனது தாய் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் செல்லப்பனை மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவன் பரிதாபமாக இறந்தான். இது குறித்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிறந்தநாளை கொண்டாட செலவுக்கு தாய் பணம் தர மறுத்ததால் விரக்தி அடைந்து மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் ஆனத்தூர் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.