8 ஆயிரம் தெருநாய்களுக்குவெறிநோய் தடுப்பூசி
திண்டுக்கல் மாநகராட்சியில் சுற்றித்திரியும் 8 ஆயிரம் தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது.
தெருநாய்கள்
திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில், கடந்த சில ஆண்டுகளாக தெருநாய்களுக்கு கருத்தடை செய்யும் பணி நிறுத்தப்பட்டது. இதனால் தெருநாய்களின் எண்ணிக்கை கடுமையாக உயர்ந்தது. தெருக்களில் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரியும் தெருநாய்களால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர்.
எனவே தெருநாய்களின் தொல்லையை தடுக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து தெருநாய்களுக்கு கருத்தடை செய்யும் பணி இன்னும் 2 மாதங்களில் மீண்டும் தொடங்க இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். அதேநேரம் தெருநாய்களிடம் கடிபட்டு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு செல்வோரின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது.
வெறிநோய் தடுப்பூசி
எனவே கருத்தடை செய்யும் பணி தொடங்குவதற்கு முன்பு, அனைத்து தெருநாய்களுக்கும் வெறிநோய் தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக மாநகராட்சி முழுவதும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் நகர் முழுவதும் 8 ஆயிரம் தெருநாய்கள் இருப்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து 8 ஆயிரம் தெருநாய்களுக்கும் வெறிநோய் தடுப்பூசி செலுத்தும் பணி தற்போது தொடங்கி உள்ளது. இதற்காக மாநகராட்சி வாகனத்துடன் பணியாளர்கள் ஒவ்வொரு பகுதியாக சென்று தெருநாய்களை பிடித்து சென்று, வெறிநோய் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.