கோவையில் ஒரே நாளில் லாரி உள்பட 8 வாகனங்கள் பறிமுதல்

கோவையில் ரேஷன் அரிசி கடத்தலுக்கு பயன்படுத்திய லாரி உள்பட 8 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.c
கோவையில் ரேஷன் அரிசி கடத்தலுக்கு பயன்படுத்திய லாரி உள்பட 8 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
2 குழு அமைப்பு
தமிழகத்தில் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை கூடுதல் டி.ஜி.பி. அருண் உத்தரவிட்டார்.
இதையடுத்து கோவை வழியாக கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க பொள்ளாச்சி குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் தலைமையில் ஒரு குழுவும், சப்-இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் தலைமையில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டது.
இந்த குழுவினர் எல் அண்டு டி பைபாஸ் சாலை, உக்கடம் பைபாஸ் சாலை உள்ளிட்ட இடங்களில் வாகன தணிக்கை செய்தனர். அப்போது உக்கடம்-செல்வபுரம் சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரியை போலீசார் சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தனர்.
ரேஷன் அரிசி கடத்தல்
அப்போது அதில் 60 மூட்டைகளில் 3 டன் ரேஷன் அரிசி கேரளாவிற்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. உடனே அந்த ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் கோவை உக்கடத்தை சேர்ந்த அபி என்ற அபிப் ரகுமான் கேரளாவிற்கு கடத்துவதற்காக லாரியில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்தது தெரியவந்தது. தலைமறைவான அவரை போலீசார் தேடி வருகின்றனர். அவர் மீது ஏற்கனவே 8 முறை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
3 பேருக்கு வலைவீச்சு
இதையடுத்து மதுக்கரை மரப்பாலம் பகுதியில் சோதனை நடை பெற்றது. அப்போது மினி டெம்போ வேனில் 2 டன் ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக கேரள மாநிலம் பாலக்காடு மாவட் டத்தை சேர்ந்த ராஜேஸ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
இதில் தொடர்புடைய குனியமுத்தூரை சேர்ந்த குட்டி ராஜேந் திரன், சூர்யா, வாளையாரை சேர்ந்த சபீர் ஆகிய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
இது குறித்து குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு போலீசார் கூறும்போது, ஒரே நாளில் நடத்தப்பட்ட வாகன சோதனையில் 5 டன் ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்பட்ட ஒரு லாரி, கார், மினி டெம்போ வேன் மற்றும் 5 மோட்டார் சைக்கிள் என மொத்தம் 8 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்றனர்.






