8 கிராம மக்கள் போராட்டம்
முசிறி அருகே 8 கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
முசிறி அருகே 8 கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
போராட்டம்
முசிறி அருகே வெள்ளூர் கிராமத்தில் மகாமாரியம்மன் கோவில் உள்ளது. 200 ஆண்டுகள் பழமையான 8 ஊர் கிராம மக்கள் பொதுவான கோவிலாக பயன்படுத்தி வருகின்றனர். கோவிலின் பரம்பரை அறங்காவலராக கிராமத்தில் நியமிக்கப்பட்ட முத்துக்கருப்பன் மகன் சீனிவாசன் செயல்பட்டு வருகிறார்.
இந்த நிலையில் இக்கோவிலை இந்துசமய அறநிலைய துறை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவருவதாக கிராம மக்களுக்கு தகவல் வந்தது. இதனையடுத்து 8 கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கோவில் முன்பு திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் பிருந்தாநாயகி, நிர்வாக அதிகாரி ராகினி, கோவில் பூசாரி செல்வ முத்துக்குமார் மற்றும் முசிறி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
நடவடிக்கை
இதில் மகா மாரியம்மன் கோவிலை இந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டிற்கு எடுக்கக் கூடாது, பரம்பரை அறங்காவலராக செயல்பட்டு வரும் சீனிவாசன் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை எடுத்துரைத்து, அதிகாரியிடம் கோரிக்கை குறித்த மனுவினை வழங்கினர். கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட அதிகாரிகள் கோரிக்கைகளை உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர். இதனையடுத்து பொதுமக்கள் போராட்டத்தினை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் வெள்ளூர் கிராமத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.