லாரி மீது பஸ் மோதி 8 தொழிலாளர்கள் காயம்


லாரி மீது பஸ் மோதி 8 தொழிலாளர்கள் காயம்
x

நெமிலி அருகே லாரி மீது பஸ் மோதி 8 தொழிலாளர்கள் காயம்அடைந்தனர்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் திருத்தணியில் இருந்து அரக்கோணம் வழியாக ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு நேற்று காலை தனியார்நிறுவன பஸ் சென்றது. திருத்தணியை சேர்ந்த நிஷாந்த் (26) பஸ்சை ஓட்டி சென்றார். அரக்கோணத்தை அடுத்த சேந்தமங்கலம் பருவமேடு பகுதியில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், ரோட்டின் ஓரம் நின்றுக்கொண்டிருந்த லாரியின் பின்புறமாக மோதியது.

இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி நொறுங்கியது. பஸ்சில் பயணம் செய்த தொழிலாளர்கள் சிவராமன் (36), பழனிவேல் (40), சசிக்குமார் (39), செல்வம் (39), விஜயன் (24), கணேஷ்குமார் (32), சேகர் (31) உள்ளிட்ட 8 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு காஞ்சீபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து நெமிலி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story