ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற கம்யூனிஸ்டு கட்சியினர் 80 பேர் கைது


விலைவாசி உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் காட்பாடியில் ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற 80 பேரை போலீசார் கைது செய்தனர்.

வேலூர்

மறியல் போராட்டம்

விலைவாசி உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று ரெயில் மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனால் நேற்று காலை 10 மணி முதலே காட்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி தலைமையில் போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தடுப்புகளை அமைத்து பயணிகளை சோதனை செய்து அனுப்பி வைத்தனர்.

ரெயில் நிலைய வளாகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகி சீனிவாசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாற்றுத்திறனாளிகள் நல சங்க தலைவர் கோபால் ராஜேந்திரன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில், அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க வேண்டும். சமூக பாதுகாப்பான நிரந்தர வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும். குறைந்தபட்ச மாத சம்பளம் ரூ.26 ஆயிரம் வழங்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை 250 நாட்களாக உயர்த்தி நாள் ஒன்றுக்கு ரூ.600 வழங்க வேண்டும்.

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு திட்டத்தை ஏற்படுத்த வேண்டும். குறைந்தபட்சம் ரூ.3 ஆயிரம் பென்ஷன் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நிர்வாகிகள் பேசினர்.

இதையடுத்து நிர்வாகிகளில் சிலர் போலீஸ் அமைத்திருந்த தடுப்புகளை தாண்டி ஓடினர். இதனால் போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் அவர்களை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். மொத்தம் 80 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால், காட்பாடி ரெயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

குடியாத்தம்

குடியாத்தம், பேரணாம்பட்டு தாலுகா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் குடியாத்தம் புதிய பஸ் நிலையம் அருகே மறியல் போராட்டம் நடைபெற்றது. மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.டி.சங்கரி தலைமை தாங்கினார். தெற்கு தாலுகா செயலாளர் சி.சரவணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.காத்தவராயன், மாவட்ட குழு உறுப்பினர்கள் பி.குணசேகரன், கே.சாமிநாதன், தாலுகா செயலாளர் சிலம்பரசன், குபேந்திரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

வேலூர்

வேலூர் தாலுகா குழு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வேலூர் தலைமை தபால் நிலையம் முன்பு மாநிலக்குழு உறுப்பினர் சுவாமிநாதன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வேலூர் மாவட்ட செயலாளர் தயாநிதி, செயற்கு உறுப்பினர் ராமச்சந்திரன், மாவட்ட குழு உறுப்பினர் மகாலிங்கம், தாலுகா செயலாளர் செல்வி மற்றும் பலர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.

அதைத்தொடர்ந்து அவர்கள் அண்ணாசாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சீனிவாசன், பழனிமுத்து, பேபி தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்ட 56 பெண்கள் உள்பட 139 பேரை கைது செய்தனர்.

நெரிசலில் சிக்கிய குழந்தை மீட்பு

காட்பாடியில் நடந்த போராட்டத்தில் ஒரு பெண், கைக் குழந்தையுடன் கலந்து கொண்டார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றிக்கொண்டிருந்தனர். அப்போது குழந்தை ஒன்று நெரிசலில் சிக்கிக்கொண்டது. இதனை பார்த்த போலீஸ் அதிகாரி ஒருவர், குழந்தையை பத்திரமாக மீட்டு தாயிடம் ஒப்படைத்தார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் போது கைக்குழந்தையுடன் வருவதை தவிர்க்குமாறு அந்தப் பெண்ணுக்கு போலீசார் அறிவுரை வழங்கினர்.


Next Story