பிளஸ்-2 தேர்வை 8,212 பேர் எழுதுகின்றனர்


நாகை மாவட்டத்தில் இன்று (திங்கட்கிழமை) நடக்கும் பிளஸ்-2 தேர்வை 8,212 பேர் எழுதுகின்றனர். நாளை பிளஸ்-1 தேர்வு தொடங்குகிறது.

நாகப்பட்டினம்

நாகை மாவட்டத்தில் இன்று (திங்கட்கிழமை) நடக்கும் பிளஸ்-2 தேர்வை 8,212 பேர் எழுதுகின்றனர். நாளை பிளஸ்-1 தேர்வு தொடங்குகிறது.

பொதுத்தேர்வுகள்

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் (ஏப்ரல்) மாதம் 3-ந் தேதி வரை நடக்கிறது. பிளஸ்-1 பொதுத்தேர்வு நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்கி ஏப்ரல் மாதம் 5-ந் தேதி வரையும் நடக்கிறது. எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி தொடங்கி 20-ந் தேதி வரை நடக்கிறது.

நாகை மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத் தேர்வை 3,892 மாணவர்களும், 4,320 மாணவிகளும் என மொத்தம் 8,212 பேர் எழுதுகின்றனர்.

அதேபோல பிளஸ்-1 பொதுத் தேர்வை 3,420 மாணவர்களும், 4,122 மாணவிகளும் என மொத்தம் 7,542 பேர் எழுதுகின்றனர்.

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 4,547 மாணவர்களும், 4,277 மாணவிகளும் என மொத்தம் 8,824 பேர் எழுதுகின்றனர். பிளஸ்-1, பிளஸ்- 2 பொதுத்தேர்வுகளுக்காக மாவட்டத்தில் 34 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கண்காணிப்பு கேமரா

முன்னதாக பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வுக்கான வினாத் தாள்கள் அரசு தேர்வுகள் துறை சார்பில் சென்னையில் இருந்து நாகைக்கு கொண்டு வரப்பட்டன. இவை மாவட்டத்தில் உள்ள 4 பாதுகாப்பு மையங்களில் வைக்கப்பட்டு உள்ளன. வினாத்தாள் வைக்கப்பட்டுள்ள அந்த அறைகளுக்கு 'சீல்' வைக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறைகள் முன்பு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். மேலும் அங்கு கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டு உள்ளன.

தேர்வு எண்கள் எழுதும் பணி

இந்த பொதுத்தேர்வுகளுக்காக மாவட்டத்தில் 5 பறக்கும் படை குழுவினர், 56 நிலையான பறக்கும் படை உறுப்பினர்களும் தயாராக உள்ளனர் என்று கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தேர்வு மையங்களில் தேர்வு எண் எழுதும் பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபட்டனர்.


Next Story