புதுக்கோட்டையில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை 84 ஆயிரம் பேர் இணைப்பு


புதுக்கோட்டையில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை 84 ஆயிரம் பேர் இணைப்பு
x

புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை மின் இணைப்புடன் ஆதார் எண்ணை 84 ஆயிரம் பேர் இணைத்துள்ளனர்.

புதுக்கோட்டை

ஆதார் எண்

மின் இணைப்போடு ஆதார் எண்ணை இணைக்க மின்சார வாரியம் அறிவுறுத்தி உள்ளது. அதன்படி மின் நுகர்வோர்கள் தங்களது மின்சார இணைப்போடு ஆதார் எண்ணை இணைத்து வருகின்றனர். வீட்டு உபயோகம், குடிசை, விவசாயம், கைத்தறி, விசைத்தறி இணைப்புகள் உள்ளவர்கள் தங்களது ஆதார் எண்ணை இணைத்து வருகின்றனர். இதற்காக மின்சார வாரியம் சார்பில் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாதம் முழுவதும் விடுமுறை நாட்கள் தவிர முகாம் நடைபெறுகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, அறந்தாங்கி, ஆலங்குடி, கீரனூர், திருமயம் ஆகிய மின்சார வாரிய கோட்டங்கள் உள்ளன. இதில் வீட்டு மின் இணைப்பு 4,60,533 பேரும், விவசாய மின் இணைப்புகள் 66,437, குடிசைகள் மின் இணைப்பு 48,041, கைத்தறி மின் இணைப்பு 4, விசைத்தறி மின் இணைப்பு 2 என மொத்தம் 5 லட்சத்து 75 ஆயிரத்து 17 மின் இணைப்புகளில் ஆதார் எண் இணைக்கப்பட வேண்டி உள்ளது.

84 ஆயிரம் பேர் இணைப்பு

இந்த நிலையில் மின் நுகர்வோர்கள் தங்களது ஆதார் எண்ணை இணைக்க மின்வாரிய அலுவலகங்களில் நடைபெறும் சிறப்பு முகாமில் தினமும் குவிந்து வருகின்றனர். இதுதவிர ஆன்லைனிலும் இணைத்து வருகின்றனர். மின் நுகர்வோர்கள் தங்களது பெயர், மின்சார இணைப்பு எண், ஆதார் எண் ஆகியவற்றை மட்டும் கொடுத்தால் போதும், ஊழியர்கள் கணினியில் இணைத்து விடுகின்றனர். இதற்கு முன்பு செல்போன் எண்ணிற்கு ரகசிய குறியீடு எண் கேட்கப்படும். தற்போது அந்த நடைமுறை இல்லை எனவும், சிறப்பு முகாம்களில் எளிதாக இணைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்று முன்தினம் வரை மாவட்டத்தில் மொத்தம் 83 ஆயிரத்து 931 பேர் தங்களது மின் இணைப்போடு ஆதார் எண்ணை இணைத்திருப்பதாக மேற்பார்வை பொறியாளர் சேகர் தெரிவித்தார்.

விவசாயிகள்

விவசாயிகள் தங்களது ஆதார் எண் இணைப்பதை அதிகம் ஆர்வம் காட்டாமல் இருப்பதாக கூறப்படுகிறது. ஆதார் எண்ணை இணைத்தால் சலுகைகள் எதுவும் கிடைக்காமல் போய்விடுமோ என அச்சத்தில் உள்ளனர். இதேபோல் மின் இணைப்புகளில் உள்ள பெயர்களில் உள்ளவர்கள் இறந்திருந்து, அவர்கள் பெயரிலேயே தொடர்ந்து இருந்து வந்தால் அதனை பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்பதால் சற்று தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.


Next Story