18 ரெயில் நிலையங்களுடன் அமைக்கப்படுகிறது- ரூ.8,500 கோடியில் மதுரையில் மெட்ரோ திட்ட பணி அடுத்த ஆண்டு தொடங்கும் -நிர்வாக இயக்குனர் தகவல்


18 ரெயில் நிலையங்களுடன் அமைக்கப்படுகிறது- ரூ.8,500 கோடியில் மதுரையில் மெட்ரோ திட்ட பணி அடுத்த ஆண்டு தொடங்கும் -நிர்வாக இயக்குனர் தகவல்
x

மதுரையில் மெட்ரோ ரெயில் திட்டப்பணிகள் குறித்து அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

மதுரை


மதுரையில் மெட்ரோ ரெயில் திட்டப்பணிகள் குறித்து அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

மதுரை மெட்ரோ ரெயில்

மதுரையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மெட்ரோ ரெயில் திட்டம் குறித்து மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி, பொதுப்பணித்துறை, தொல்லியல் துறை மற்றும் மதுரை கோட்ட ரெயில்வே நிர்வாகம் ஆகியவற்றின் அதிகாரிகளுடனான ஆலோசனைக்கூட்டம் மதுரையில் நேற்று நடந்தது.

இதில், மதுரை மெட்ரோ ரெயில் திட்ட பணிகள் குறித்து விரிவான ஆலோசனை நடந்தது.

இது குறித்து சென்னை மெட்ரோ ரெயில் கார்ப்பரேசன் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் சித்திக் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்த வருட தமிழக பட்ஜெட்டில் அறிவித்தபடி, முன்னுரிமை அடிப்படையில் மதுரை மெட்ரோ ரெயில் திட்டத்துக்கான விரிவான அறிக்கை தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.8,500 கோடியில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார். இதற்காக ஒரு தனியார் நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

18 ரெயில் நிலையங்கள்

ஒத்தக்கடை-திருமங்கலம் இடையே 25 கி.மீ. மேம்பால ரெயில்பாதையில் 14 ரெயில்நிலையங்களும், 5 கி.மீ. தூரத்துக்கு பூமிக்கு அடியிலும் ரெயில் பாதை அமைக்கப்படும். இந்த 5 கி.மீ. தூரம் மீனாட்சியம்மன் கோவிலை சுற்றிலும் எந்த பாதிப்பும் இல்லாமல் பூமிக்கு அடியில் அமைக்கப்படும். இதில் 4 ரெயில் நிலையங்கள் வருகிறது. விரிவான திட்ட அறிக்கை தயாரானவுடன் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். அவர்களின் ஒப்புதல் கிடைத்த பின்னர் திட்டம் முழுவீச்சில் தொடங்கும். திட்ட அறிக்கை ஜூன் மாதத்துக்குள் தயாரிக்கப்படும். இதற்காக பிற துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் தற்போது நடந்துள்ளது.

மாநில அரசு ஒப்புதல் கிடைத்த பின்னர், மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி ஒப்புதல் கிடைத்தவுடன் நிதி ஆதாரங்களை திரட்ட வேண்டியுள்ளது. அடுத்த ஆண்டு ஜூன் மாதம் இந்த பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளோம்.

3 ஆண்டுக்குள் முடிக்க திட்டம்

அனைத்தும் திட்டமிட்ட காலத்திற்குள் நடந்தால், அடுத்த ஆண்டு இறுதிக்குள் பணிகள் தொடங்கி 3 வருடத்துக்குள் முடிக்கப்படும். ரோமில் மெட்ரோ திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. எனவே மதுரையில் திட்டத்தை செயல்படுத்துவதில் எந்த சிரமமும் இருக்காது. பூமிக்கு அடியில் அமைக்கும் ரெயில் பாதைக்காக ½ கி.மீ. தூரத்துக்கு ஒரு போர்வெல் அமைத்து நீர் ஆதாரம் சோதனை செய்யப்படும். மதுரையில் 3 பெட்டிகளை கொண்ட ரெயில் இயக்கப்படும். இதில் 750 பயணிகள் பயணம் செய்யலாம். சுமார் 10 நிமிட இடைவெளியில் ஒரு ரெயில் இயக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில், மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர், மதுரை கோட்ட ரெயில்வே மேலாளர் அனந்த், மாநகராட்சி கமிஷனர் சிம்ரன்ஜித் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story