வட்டார கல்வி அலுவலர் தேர்வை 866 பேர் எழுதினர்


வட்டார கல்வி அலுவலர் தேர்வை 866 பேர் எழுதினர்
x

வேலூர் மாவட்டத்தில் 4 மையங்களில் நடந்த வட்டார கல்வி அலுவலர் பதவிக்கான தேர்வை 866 பேர் எழுதினார்கள். தேர்வு மையங்களை தொடக்கக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் ஆய்வு செய்தார்.

வேலூர்

வட்டார கல்வி அலுவலர் தேர்வு

தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் 33 வட்டார கல்வி அலுவலர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத்தேர்வு தமிழகம் முழுவதும் நடந்தது. வேலூர் மாவட்டத்தில் இந்த தேர்வை எழுத 1,022 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

அவர்களுக்காக வேலூர் வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளி, கிருஷ்ணசாமி முதலியார் மேல்நிலைப்பள்ளி, காட்பாடி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகள் என்று 4 தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

இந்த நிலையில் வட்டார கல்வி அலுவலர் பதவிக்கான தேர்வு காலை 10 முதல் பிற்பகல் 1.30 மணி வரை நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகள் கூடுதலாக 30 நிமிடங்களில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.

தேர்வர்கள் காலை 9 மணி முதல் தேர்வு மையங்களுக்கு வரத்தொடங்கினர். அவர்கள் பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர். செல்போன், கால்குலேட்டர் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் தேர்வு அறைக்குள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை.

866 பேர் எழுதினர்

வட்டார கல்வி அலுவலர் தேர்வை 866 பேர் எழுதினார்கள். 156 பேர் பங்கேற்கவில்லை. தேர்வு மையங்களை பள்ளி கல்வித்துறை தொடக்கக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் நேரில் ஆய்வு செய்தார்.

அப்போது வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி, வேலூர் கல்வி மாவட்ட அலுவலர் அங்குலட்சுமி ஆகியோர் உடனிருந்தனர்.

தேர்வு அறை மற்றும் தேர்வு மையங்களை கண்காணிக்கும் பணியில் 50-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபட்டிருந்தனர். அதேபோன்று பறக்கும்படையினரும் தேர்வு மையங்களில் ஆய்வு மேற்கொண்டனர். தேர்வு மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

1 More update

Next Story