பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 9 பேர் கைது


பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 9 பேர் கைது
x

உளுந்தூர்பேட்டையில் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 9 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடம் இருந்து சொகுசு கார் உள்பட 6 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கள்ளக்குறிச்சி

உளுந்தூர்பேட்டை,

உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலை அருகே கந்தசாமிபுரம் பகுதியில் இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மகேஷ், ரவிச்சந்திரன் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட போலீசார் அப்பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர்.

போலீசாரை கண்டதும் ஓட்டம்

அப்போது கந்தசாமிபுரம் தனியார் பள்ளி பின்புறம் கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களுடன் நின்று கொண்டிருந்த ஒரு கும்பல் போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பி ஓடியது. உடனே சுதாரித்துக்கொண்ட போலீசார், அவர்களை துரத்திச் சென்று 9 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள், உளுந்தூர்பேட்டை கந்தசாமிபுரத்தை சேர்ந்த ரமேஷ் (வயது 28), மணிராஜ் (22), மோகன்ராஜ் (26), விஜய் (24), மேக்டவுன் (29), அன்னைசத்யா தெருவை சேர்ந்த நாராயணன் (29), அருண்குமார் (19), எலவனாசூர்கோட்டை மூமின் (29), மங்கலம்பேட்டை மணிகண்டன் (36) என்பதும், விற்பனைக்காக 2 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

9 பேர் கைது

மேலும் இவர்கள் உளுந்தூர்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த பல நாட்களாக இளைஞர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதனால் பல மாணவர்கள் கஞ்சா பழக்கத்துக்கு அடிமையாகி இருப்பதும் தெரிந்ததும். இதையடுத்து ரமேஷ் உள்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த சொகுசு காரும், 5 மோட்டார் சைக்கிள்கள், 2 கிலோ கஞ்சா ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். துரிதமாக செயல்பட்டு கஞ்சா விற்பனை செய்த போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகவலன் பாராட்டினார். கஞ்சா விற்பனை செய்ததில் முக்கிய நபராக ரமேஷ் செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கதாகும்.


Related Tags :
Next Story